தொழிலாளியாக இல்லாமல் விவசாயம் மூலம் முதலாளியான பட்டதாரி…

 |  First Published Feb 4, 2017, 2:06 PM IST



நெல் நடவு செய்வதற்கு ஆள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், விதைநெல் மட்டும் வழங்கினால் போதும், நாற்றங்கால் தயார் செய்து, இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்து அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரி கே. மயில்சாமி.

இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், விவசாயிகள் விவசாயம், செய்தாலும் வேலைகளுக்கு ஆள்கள் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் நெல் நடவு முறையில் இயந்திரப் பயன்பாட்டை வேளாண் துறை அறிமுகப்படுத்தி, விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

இச்சூழலில் நிகழாண்டில் விவசாயிகளின் வேளாண் பணியை மேலும் எளிதாக்கும் வகையில், நாற்றங்கால் தயார்செய்து, நெல் நடவு செய்தல் வரையிலான பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும் பணியை லால்குடி வட்டத்தில் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் கே. மயில்சாமி (31).

பி.பி.ஏ. படித்து, தனியார் காகித நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இயந்திர நெல் நடவு செயல் விளக்கத்தைப் பார்த்து, தனது வேலையை விட்டுவிட்டு, இயந்திர நெல் நடவுப் பணியைச் செய்து கொடுக்கத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

விதை நெல் தந்தால் போதும்:

பொதுவாக நெல் நடவு நடைபெறும் நேரத்தில் டெல்டா பகுதிகளுக்கு வந்துவிடுவோம். என்னிடம் 5 இயந்திர நெல் நடவு இயந்திரங்கள் உள்ளன. 40 கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஏக்கருக்கு ஏற்றவாறு விதை நெல் தந்தால் போதும். நாங்களே பாய் நாற்றங்கால் அல்லது தட்டு நாற்றங்கால் என விவசாயிகளின் தேவைக்கேற்ப நாற்றங்காலைத் தயார் செய்து, எங்களின் இயந்திரங்கள் மூலம் நடவுப் பணியைச் செய்து கொடுத்து விடுவோம்.

இப்பணிக்காக ஏக்கருக்கு ரூ. 3500 என்ற வீதத்தில் தொகை பெறுகிறோம். அதேநேரத்தில் செலவும் அதே அளவில் இருக்கிறது. நெல் நடவு இயந்திரத்துக்கான டீசல், தொழிலாளர்களின் சம்பளம், உணவு போன்றவற்றுக்குச் செலவிடுவதால், அதிக லாபம் கிடைப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து பணி கிடைப்பதால் பிரச்னைகள் ஏதுமில்லை என்கிறார் மயில்சாமி.

டெல்டா மாவட்டப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் இதுபோன்ற பணியைச் செய்து வருகிறோம்.

திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டுதான் குறிப்பாக லால்குடி வட்டாரத்தில் அன்பில், செங்கரையூர், களத்தில் வென்றான்பேட்டை, கீழப்பெருங்காவூர், பண்பு அறம் சுற்றி, கல்விக்குடி போன்ற கிராமங்களில் இயந்திர நெல் நடவுப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விவசாயப் பணிகளைச் செய்து வந்த எங்களுக்கு, கடந்தாண்டில் ஆந்திர மாநிலத்திலிருந்தும் அழைப்பு வந்தது.

சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி நெல் நடவுப் பணியைச் செய்து கொடுத்து வந்திருக்கிறோம்.

படிப்புக்கேற்ற வேலை கிடைத்தாலும், விவசாயப் பணிக்காக ஈடுபட்டு, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய நிலை இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் மயில்சாமி.

விவசாயிகளுக்கு பெரும் பயன்:

ஆள் பற்றாக்குறையால் விவசாயப் பணி பாதிக்கப்படக் கூடாது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் போன்ற நோக்கில், இயந்திரநெல் நடவு முறையை அரசு ஊக்கப்படுத்திவருகிறது.

விவசாயிகளுக்கு பல்வேறு நிலைகளில் மானியத்தை அரசு வழங்கி வரும் நிலையில், இதுபோன்ற பணிகள் மேலும் பயனளிக்கும் என்றார் திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா. சந்திரசேகரன்.

click me!