தாவரங்களின் மணிச்சத்து பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்த சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., பாறை பாஸ்பேட் என்று மூன்று உரங்களைப் பயன்படுத்தினால் போதும்.
பயிர்களுக்குத் தேவையான முதன்மையான ஊட்டச்சத்துக்களில் மணிச்சத்து மிக மிக அவசியமானது ஆகும். மணிச்சத்தானது பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.
அதோடு அல்லாமல் தாவரங்களின் செல் மூலப் பொருட்களான உட்கரு, பாஸ்போபுரோட்டீன், பாஸ்போலிப்பிட், மரபுப்பொருள் ஆகியவை உருவாவதற்கும் மணிச்சத்து இன்றியமையாததாகும்.
நமது மண்ணில் இடப்படும் மணிச்சத்து உரங்களில் சராசரியாக 80 சதவீதம் தாவரங்களுக்கு கிடைப்பதில்லை. மிக அரிதாக 20 சதவீதமே பயிர்களுக்கு கிடைக்கின்றது.
இதற்கு பல வகையான காரணங்கள் இருந்தாலும், மண்ணின் கார அமிலத்தன்மை மிக முக்கியமான ஒன்றாகும். பொதுவாகவே மணிச்சத்து நடுநிலையான கார அமிலத் தன்மையிலேயே பயிர்களுக்கு கிடைக்கின்றது.
சந்தையில் பல வகையான மணிச்சத்து உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. அவற்றில் வியாபார ரீதியாக கிடைக்கக் கூடியது சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., பாறை பாஸ்பேட் ஆகியவையாகும்.
இவை மூன்றுமே தாவரங்களுக்கு மணிச்சத்தை கொடுத்தாலும், இந்த உரங்களை மண்ணின் கார அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு இட்டால், தாவரங்களின் மணிச்சத்து பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்தலாம்.
இதற்காக மண்ணை மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து நன்கு பரிசோதித்து அதன் கார-அமிலத் தன்மைக்கு ஏற்றவாறு உரப் பரிந்துரையை மேற்கொள்ளலாம்.
மண் அமில மண்ணாக இருந்தால் அதாவது கார-அமிலத் தன்மை 6.5க்கு குறைவாக இருந்தால் பாறை பாஸ்பரஸ் எனப்படும் ராக்பாஸ்பேட் உரத்தை இடுவது மண் மற்றும் தாவரத்திற்கு உகந்ததாகும். ஏனென்றால் பாறை பாஸ்பரஸின் கரைதிறன் அமில மண்ணில் அதிகரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
நடுநிலையான கார அமிலத்தன்மை அதாவது 6.5 – 7.5 உள்ள மண்ணிற்கு டி.ஏ.பி. எனப்படும் காம்ப்ளக்ஸ் உரம் உகந்ததாகும்.
மண் களர் மற்றும் உவர் தன்மையாக இருந்தால் அதாவது கார-அமிலத்தன்மை 7.5க்கு மேல் இருந்தால் சூப்பர் பாஸ்பேட் சிறந்த உரமாகும்.
விவசாயிகள் மேற்கூறியவாறு மணிச்சத்து உரங்களை மண்ணின் கார-அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு உபயோகித்தால் பயிர் உற்பத்தியை மேம்படுத்தி பயன்பெறலாம்.