நெல் செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சல் தர திடகாத்திரமான மற்றும் வாளிப்பான நாற்றுக்கள் தேவை.
இத்தகைய நாற்றுக்களை பெறும் வழிமுறைகள்:
விதை நேர்த்தி: குறுவை ஏக்கருக்கு 24 கிலோ சம்பா நேரடி விதைப்பில் ஏக்கருக்கு 40 கிலோவும் நடவில் ஏக்கருக்கு 16 கிலோவும் இடவேண்டும்.
விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 2 கிராம் கேப்டான் போதுமானது.
இதில் ஏதாவது ஒரு மருந்தினை ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து, பின் 10 முதல் 16 மணிநேரம் ஊறவைத்த பிறகு விதைகளை 10 முதல் 12 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டவேண்டும்.
காய்ந்த விதைகளில் விதை நேர்த்தி செய்வதைவிட ஈர விதைகளை பூசனக் கொல்லிகளுடன் விதைநேர்த்தி செய்வது நல்லது. இதற்கு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் நனையும் தூள் சேர்த்து விதையுடன் நன்றாக கலக்க வேண்டும்.
அதே சமயத்தில் ஏக்கருக்கு ஒரு பாக்கெட் வீதம் அசோஸ்பைரில்லம் கலந்து 10 முதல் 12 மணிநேரம் ஊறவைத்து பின்பு 10-12 மணிநேரம் இருட்டில் வைத்து முளை கட்ட வேண்டும். நேரடி விதைப்பிற்க்கு ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு மூலம் விதை நேர்த்தி செய்யலாம்.
நாற்றங்கால்:
குறுவை: 8 சென்ட் நாற்றங்கால்-1 சென்டிற்கு 3 கிலோ வீதம் விதைக்க வேண்டும்.
சம்பா: 8 சென்ட் நாற்றங்கால்-1 சென்டிற்கு 2 1/2கிலோ வீதம் விதைக்கவேண்டும். பாத்தி அளவு 20 மீ. நீளம் 2 மீ. அகலம். 2 மீ அகல பாத்தி அமைக்க வேண்டும். வசதிக்கேற்ப பாத்திகளின் நீளம் அமைத்துகொள்ளலாம்.
உரமிடுதல்:
நல்ல வாளிப்பான நாற்றுக்கள் பெற நாற்றங்காலுக்கு அடியுரமாக சென்டுக்கு 50 கிலோ தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இட வேண்டும்.
இத்துடன் 25 நாட்களில் நாற்று பறித்து நட வாய்ப்புள்ள இடங்களில், ஒரு சென்டிற்கு 2 கிலோ வீதம் டி.ஏ.பி. அடியுரமாக இட வேண்டும். ஆனால் 25 நாட்களில் நட, இயலாத சூழ்நிலையில் நாற்றங்காலுக்கு அடியுரமாக டி.ஏ.பி. போடக்கூடாது.
ஏனெனில் காலதாமதமாக நடவு செய்யும்போது டி.ஏ.பி. போட்ட நாற்றுக்கள் நன்றாக வளர்ந்து வேர் நீண்டு வளர்ந்து விடும். அதனால் வேர் அறுந்துபோக வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த சமயங்களில் டி.ஏ.பி.ஐ அடியுரமாக போடுவதற்கு பதிலாக நாற்றுப்பிடுங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு சென்டிற்கு ஒரு கிலோவீதம் போடவேண்டும். இவ்வாறு செய்வதால் வாளிப்பான நாற்றுக்களும் கிடைக்கும். வேர் அறுபடுவதும் குறையும். நாற்றுபறிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஜிப்சம் 1 கிலோ சென் டிற்கு இடலாம்.
களைக்கொல்லி இடுதல்:
புல்லினக் களைகள் வழங்கமாகத் தென்படும் நாற்றங்காலில் புட்டோகுளோர் அல்லது பென்தியோகார்ப் 80 மி.லி. (8 சென்டிற்கு) மருந்து 2-3 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 6-7 நாட்கள் கழித்து இடவேண்டும். அல்லது விதைத்த 8-வது நாள் அனிலோபாஸ் 40 மி.லி.(8 சென்டிற்கு) இடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
இலைப்பேன் தாக்குதலை தடுக்க 8 சென்ட் நாற்றங்காலுக்கு பொருளாதார சேதநிலை 5 கை வீச்சுக்கு 25 பூச்சிகள் இருந்தால் பி.எச்.சி. -10 சதவீதம் 1 கிலோ தூவவும் அல்லது பாஸ்போமிடான் -10மி.லி. அல்லது மானோகுரோட்டோபாஸ் 40 மி.லி. தெளிக்கவேண்டும்.
பச்சை தத்துக்கிளி தாக்குதல் இருந்தால் விதைத்த 10-ம் நாள் 2 1/2 செ.மீ. அளவு நீர் தேக்கி வைத்து குருணை மருந்தான கார்போபியூரான் 3 ஜி. 1.4 கிலோ அல்லது போரேட் 10 சதவீத குருணை 400 கிராம் இடவேண்டும்.
குருணை மருந்து இடாவிட்டால், பொருளாதார சேதநிலை சதுர மீட்டருக்கு 20 பூச்சிகள் அல்லது 25 வீச்சுக்கு 60 பூச்சிகள் இருக்கும்போது 20 லிட்டர் நீரில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளிக்க வேண்டும்.
பெனிட்ரோத்தியான் 25 மி.லி. பாஸ்போமிடான் 10 மி.லி. பாசலோன் 60 மி.லி. எண்டோசல்பான் 30 மி.லி. மானோகுரோட்டோபாஸ் 40 மி.லி., பென்தியான் 20 மி.லி. , குனைல்பாஸ் 30 மி.லி.
இவற்றை பின்பற்றினால் நெற்பயிரில் நாற்றுக்கள் வீரியாமாக வளர்வதுடன் கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.