பிரச்சனைக்குரிய கோரைகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? இதை வாசிங்க…

 |  First Published Jul 5, 2017, 12:52 PM IST
How to control the problem Read this ...



கோரை களைகள் கடினத்தன்மை கொண்டிருப்பதால் மிக விரைவில் இவைகளை நீக்க முடியாது. குறிப்பாக ஒரே ஒரு களைக் கட்டுப்பாடு முறையினை மட்டும் கையாள்வதால் இக்களையை அறவே நீக்கி விட முடியாது.

கோரை மண்டியுள்ள வயலில் இக்களையை மேலும் பரவ விடாமலும், நாட்போக்கில் இதன் வீரியத்தை குறைத்தும் சிறுகச் சிறுக இதன் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த முறையில் செயல் திட்டம் வகுப்பது சாலச் சிறந்தது.

Latest Videos

undefined

கோடைக்காலத்தில் நிலத்தை ஆழ உழுது கிழங்குகளை மண் மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து சூரிய வெப்பத்தில் காய வைத்தல், தகுந்த பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தல் போன்றவைகளைச் செயல்படுத்த வேண்டும். பாசன நீர் வசதியுள்ள நிலங்களில் சேற்றுழவு செய்து நெல் பயிரிடுவதால் இக்களைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

இக்களையை பூக்க விடாமல் தொடர்ந்து நீக்கினால் இக்களையின் வளர்ச்சியை பெரிதும் குறைக்கலாம். பயிர் வரிசையாக உள்ள தோட்டக்கலை நிலங்களில் இடை உழவு அடிக்கடி செய்தால் நல்ல பலன் கிட்டும். தீவனப் புல் வகைகளை நெருக்கி நடுவதாலும் இக்களையை சில ஆண்டுகளில் குறைக்க முடியும்.

பயிருக்கு மேலுரமிடும் போது பயிர் வரிசைக்கு அருகில் சீராக இடுவது நல்லது. இதனால் வரிசைக்கு இடையில் வளரும் கோரைப் புல்லுக்கு உரம் சென்று வீணாகாது. அடர்ந்து விரைவான வளர்ச்சியுடைய காராமணி, அவரை போன்ற பயிறு வகைகளை பயிர் வரிசைகளுக்கிடையே சாகுபடி செய்வதால் கோரை வளர்ச்சியைத் தடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கொடி வகை கிழங்கு பயிர்களை பயிர் சுழற்சியில் சேர்த்து பயிர் செய்வது நல்ல பலன் தரும். கோரைக் களையினை களைக்கொல்லி மட்டும் கொண்டு அடியோடு அழித்து விட முடியாது. எனினும் வளர்ச்சியைக் குறைக்கவும், நாளடைவில் அவற்றைக் குறையச் செய்யவும் சில களைக் கொல்லிகள் உள்ளன.

பயிர் செய்யப்படும் வயல்களில் உள்ள கோரையினையும்  பயிரிடப்படாத தரிசு நிலங்களில் உள்ள கோரையினையும் கட்டுப்படுத்த வெவ்வேறு வகையான களைக்கொல்லி மருந்தினை பயன்படுத்துதல் வேண்டும். ஆனால் பயிர் சாகுபடி இல்லாத சூழ்நிலையில் தான் களைக்கொல்லிகளை தொடர்ந்து உபயோகிக்க முடியும்.

ஊடுருவிச் செல்லும் களை மருந்தை வளர்ச்சிப் பருவத்தில் தெளிப்பதால் மருந்து இலை வழியாக உட்கிரகிக்கப் பட்டு வளர்ச்சிப் பகுதியான இளங்குருத்து மற்றும் வேரின் நுனிப்பகுதி ஆகியவற்றைத் தாக்கி அழிக்கும். களைச் செடி பூத்த பின்போ, உறக்க நிலையிலோ தெளிப்பதால் எந்த விதப் பலனும் இல்லை.

ஆகையால் பல பருவக் களையான கோரையை முளைக்கும் போதோ அல்லது நான்கு இலை பருவத்திற்குள்ளாகவோ கட்டுப்பாடு முறைகளை கையாள்வது சிறப்பானதாகும்.

பயிரிடாத நிலங்களில் கிளைபாசேட் என்ற ஊடுருவிப் பாயும் களைக் கொல்லிகளைகளைக் களைக் முளைத்த பின் தெளிப்பதால் மருந்து எல்லா பாகங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டு 10 நாட்களுக்குள் கோரை வாட ஆரம்பிக்கும். மருந்து தெளித்த 15-20 நாட்களுக்கு பிறகு நிலத்தை உழுது சாகாத கிழங்குகளை காய விட வேண்டும்.

கிளைபாசேட் மருந்தை ஏக்கருக்கு 1 லிட்டர் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கோரைகளின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு களை மருந்தினை தொடர்ந்து தெளிப்பதால் கிழங்குகளை ஓரளவிற்கு குறைக்கலாம். ஆனால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் தெளிக்கப்படும் மருந்து கிழங்குகளில் சரியாக ஊடுருவிச் செல்வதில்லை. சென்றாலும் தாய்க்கிழங்கு பாதிக்கப் படுவதில்லை.

மேலும் கிழங்குகள் உறக்க நிலையிலேயே பலகாலம் இருக்கின்றன. இதனால் மருந்தின் அளவை அதிகரித்து நன்றாக ஊடுருவிச் செல்ல செய்வதால் செலவு அதிகரிப்பதோடு பின் வரும் பயிர்களைப் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே ஒருங்கிணைந்த முறைகளை அவ்வப்போது கையாண்டு பிரச்சனைக்குரிய கோரைகளை கட்டுப்படுத்துவது தான் நாளடைவில் சிறந்த முறையாகும்.

click me!