பசுந்தாள் உரங்களில் டெய்ன்சா (தக்கைப் பூண்டு), செஸ்பேனியா (சீமை அகத்தி) இவைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
ஒரு ஏக்கரில் 25-30 கிலோ விதை விதைப்பதற்குத் தேவைப்படும். விதையை உடனே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மணல் தரைநிலம், குறுமண் நிலம், களிமண் நிலம், வண்டல் நிலம் ஆகியவற்றிற்கும் செஸ் பேனியா ஏற்றது. தக்கைப் பூண்டு எனப்படும் டெய்ன்ச்சாவையும் பயன்படுத்தலாம்.
undefined
ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ வரை உபயோகிக்கலாம். குறிப்பாக களர், உவர் நிலத்தை சரிசெய்ய உகந்த பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டாகும். இது மிருதுவான தண்டினைப் பெற்றது. வறட்சியையும், நீர் தேக்கத்தையும் எதிர்த்து வளரக்கூடியது. ஒரு ஏக்கரில் 8000 கிலோ வரை பசுந்தாள் கொடுக்கக்கூடியது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா என்ற ஊரில் செயல்படும் விவசாய பண்ணையில் நெல் வயலுக்கு செஸ்பேனியா இட்டு பலன் அடைகின்றது. பஞ்சாபின் நெல்லின் ஆரம்பக்கட்டத்தில் இயற்கை உரத்தையும் தூர் பிடிக்கும் கட்டத்தில் ரசாயன உரத்தையும் இட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதுபோன்ற குணம் தக்கைப்பூண்டிற்கும் உண்டு. நெல் பயிரில் பூஞ்சாள நோய் பரவுவதை தக்கைப் பூண்டு தடுத்துவிடும்.
பசுந்தாள் உரத்தில் சணப்பும் இடம்பெற்று விட்டது. நெல் பயிருக்கும் இது ஏற்றது. சணப்பு பயிர் தண்டு பாகம் கடினமாக இல்லாமல் மிருதுவாக இருப்பதால் மணல் நிலத்தில் மடக்கி உழுது மண்ணுடன் கலக்கும்போது தண்டு எளிதில் மக்கிவிடுகின்றது. ஒரு ஏக்கரில் 10,000 கிலோ தழை கிடைக்கும். இதை மடக்கி உழும்போது நிலத்திற்கு சுமார் 37 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது. இது நிலத்திற்கு 3 டன் மக்கிய தொழு உரம் இடுவதற்கு சமமாகும். பசுந்தாள் உரம் நெல் பயிருக்கு மட்டும்தான் என்று நினைக்கக் கூடாது.
புரட்டாசியில் மழை பெய்தால் மாமரங்கள் இடையில் தக்கைப்பூண்டு விதைத்து நன்கு வளர்ந்தவுடன் மடக்கி உழுதுவிடலாம். நெல் அறுவடை செய்த வயல்களில் பசுந்தாள் உரச்செடிகளை வளர்த்து அது வளர்ந்தபிறகு அவற்றை மடக்கி உழுதால் நிலத்தில் வளம், மண்ணின் வளம் அதிகரிக்கின்றது.
பசுந்தாள் உரத்தைப்பற்றி பேசும்போது அதை பூமியில் மடக்கி உழ இயந்திரங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் யாதெனில் நிலத்தில் எட்டு அங்குல ஆழத்திற்கு மண் கட்டிகளை உடைத்து மண் துகள்களை மென்மையான முறையில் கொண்டுவர வேண்டுமென்பதே. இம்மாதிரி செய்வதால் நீர் கசிந்து வீணாவதை தடுத்து நிலத்தில் நீரைத்தேக்கி வைக்கலாம். இதனால் களைச்செடிகள் தோன்றாது.
இதோடு அங்ககச்சத்து மண்ணில் கலந்து விடுகிறது. ஒரு ஏக்கரில் மாடுகள் கொண்டு நிலத்தை உழுது சேறாக்கு வதற்கு ரூ.2000 வரை ஆகலாம். மேலும் அதிகமாகக்கூட ஆகலாம். ஆனால் கருவிகள் கொண்டு செய்தால் மிகவும் குறைந்துவிடும். கருவிகள் செய்யும் பணி மிக சீராக இருப்பதுடன் பயிர் விளைச்சல் அதிகமாக இருக்கும். கருவிகள் என்று கூறும்போது ரோட்ட வேட்டர் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும். இக்கருவி பசுந்தாள் உரங்களை கடுவிரைவில் பசுந்தாள் உரத்தை மடக்கி உழுது விடுகிறது. செடிகள் அனைத்தும் உழப்பட்டு பூமியில் அமிழ்த்து விட்டு வயலில் நிலம் நாற்று நடுவதற்கு டேபிள்டாப் போல் சமப்படுத்தி விடும்.
பல விவசாயிகள் இந்தக் கருவியை உபயோகிக்க வாடகை கொடுத்து பயன் அடைகின்றனர். ரோட்ட வேட்டர் இருக்கும்போது களையெடுக்கும் கருவி, சமப்படுத்தும் கருவி போன்று தனித்தனியாக கருவிகள் வாங்க வேண்டாம்.
கிணற்றுப்பாசனம் மூலம் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் நெல் அறுவடை செய்த வயலில் பசுந்தாள் உரங்களை இட்டு அது வளர்ந்தபிறகு அவற்றை மடக்கி உழுது பயன் அடையலாம்.