அசோலா என்பது நீரில் மிதந்து வாழக்கூடிய பெரணி தாவர வகையாகும். இவை தமிழில் மூக்குத்தி அல்லது கம்மல் செடி என்று அழைக்கப்படும். இத்தாவரம் சிறிய வடிவ இலைகளையும், துல்லியமான வேர்களையும் கொண்டது. பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் தண்டு, வேர்ப்பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படும். நீலப்பச்சை பாசியான அனபீனா அசோலாவுடன் கூட்டாக வளர்ந்து தழைச்சத்தை நிறுத்தும் இயல்புடைய அசோலா வேகமாக வளரும் தன்மை கொண்டது.
கழிவு நீரில் அதிகளவு முக்கிய ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ் உள்ளதால் இவை சுற்றுச் சூழல் மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளது. எனவே, அதிகளவு ஊட்டச்சத்துக்களை கழிவு நீரிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.
தற்போது நைட்ரஜன், பாஸ்பரசை கழிவுநீரிலிருந்து வெளியேற்றுவதற்கு நீர்வாழ் தாவரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அசோலாவுக்கு தழைச்சத்தை நிலைநிறுத்தும் திறன் உள்ளதால் கழிவு நீரிலிருந்து நைட்ரஜனைக் எடுத்துக் கொண்ட பின், பாஸ்பரசையும் வெளியேற்றுகிறது.
அசோலா தாவரம் குறுகிய நாட்களில் இரட்டிப்பு தன்மை அடைந்து விடுவதால் கழிவு நீரிலிருந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களை அகற்றுகிறது. கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா அறுவடை செய்யப்பட்டு, நெல்லுக்கு பசும் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
கழிவுநீரை தூய்மைப்படுத்த கழிவு நீரில் அசோலாவை வளர்க்கலாம். இது கழிவு நீரை தூய்மையாக்கும் செலவு குறைந்த முறையாகும்.
கழிவு நீரில் வளர்க்,கப்பட்ட அசோலா பசும் உரமாகவும், கால்நடை தீவனமாகவும், உயிர் எரிபொருளாகவும் பயன்படுகிறது. உலர்ந்த அசோலாவில் உள்ள புரதங்களையும், அமினோ அமிலங்களையும் ஆய்வு மேற்கொண்டபொழுது கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா சற்று அளவுக்கதிகமான கச்சாப் புரதங்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மித்யோனைன், ஹிஸ்டிடின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே, அசோலா சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுத்துவதுடன், கழிவு நீரை தூய்மையாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.