பழப்பயிர் சாகுபடி இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தியாவில் பழப்பயிர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் பழப்பயிர்கள் பயிரிடப்பட்டாலும், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்தில் தற்போது 32.18 இலட்சம் எக்டர் பரப்பளவில் பழப்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. 99.65 இலட்சம் டன்கள் இதில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி திறன் ஒரு எக்டருக்கு 31 டன்களாக உள்ளது.
பழப்பயிர்களில் வாழை முக்கியமானது. தமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல எக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திசு வளர்ப்பு வாழைகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழையில் கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளது. வாழையில் போன்றவை உள்ளது. வாழையில் அடர்நடவு முறையில் 1.8 பை 3.6 மீட்டர் இடைவெளியில் மூன்று கன்றுகள் குழிக்கு நடவு செய்வதன் மூலம் எக்டருக்கு 4630 கன்றுகளை பயிரிட முடியும்.
மேலும், இம்முறையில் சொட்டு நீர் பாசனம் மூலம் உரமிடுவதால் விளைச்சல் எக்டருக்கு 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம். நீர்த்தேவையையும், உரத்தேவையையும், குறைக்கப்படுவதால் உழவர்கள் அதிக இலாபம் ஈட்ட முடியும்.
இந்த முறையில் வாழையின் பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகளை காட்டிலும் அடர்நடவு முறையில் ஒரு குழியில் உள்ள மூன்று கன்றுகளுக்கு அளிக்கும்போது 75 சதவீத உரங்களை அளித்தால் போதுமானது.
குலைக்கு 0.2 சதவீதம் அளவில் துளையிடப்பட்ட சூரிய ஒளி உட்புகக்கூடிய வெண்ணிற பாலித்தீன் உறைகளை கொண்டு கடைசி சீப்பு வெளி வந்தவுடன் மூடுவதன் மூலம் எவ்வித சேதாரம், மாசு மரு இல்லாத பழங்களை பெற முடியும்.
இதன் மூலம் உள்ளூர், வெளியூர் சந்தையில் பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.