தமிழ்நாட்டில் நெல் ஒரு முக்கிய பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நெல் சாகுபடியில் நடவு பணிக்கு போதுமான ஆட்கள் கிடைக்காத மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் தகுந்த பருவத்தில் குறிப்பிட்ட வயதுடைய நாற்றுக்களை நடவு செய்ய முடிவதில்லை. பருவம் தவறி நடவு செய்வதால் பயிர்வளர்ச்சி குன்றுவதுடன் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சரியான பருவத்தில் நடவு செய்ய நடவு எந்திரம் பெரிதும் துணை புரிகிறது.
இதற்காக நல்ல வாளிப்பான நாற்றுக்களை உற்பத்தி செய்ய “திருந்திய பாய் நாற்றங்கால்” தயாரித்தல் மிகவும் அவசியமாகும்.
நாற்றங்கால் தயாரிக்கும் முறை
வயலிலேயே பாய் நாற்றங்கால் தயாரிக்கலாம். வயலை நன்றாக உழுது சமப்படுத்தவேண்டும். உரச்சாக்குகளை 1 மீட்டர் அகலம், 5 மீட்டர் நீளம்கொண்ட பாத்திகளாக பிரிக்கவும்.
இவ்விதம் நான்கு பாத்திகள் 1 ஏக்கர் நடவு செய்ய தேவை. பாத்திகளுக்கு இடையில் 1.5 அடி இடைவெளியில் காண் பறிக்கவும். உரச்சாக்கின் மேல் கல் இல்லாத சேற்று மண்ணை 2 செண்டிமீட்டர் உயரம் போடவும். விதை விதைப்புச்சட்டம் கொண்டு சரியான உயரத்தில் பாத்தி அமைக்கவும்.
ஏக்கருக்கு 7 கிலோ முளை கட்டிய விதையை சட்டம் ஒன்றுக்கு 70 கிராம் என்ற அளவில் சீராக தூவவேண்டும். இரண்டு நாட்கள் மேலே வைக்கோல் போட்டு மூடி வைக்கவும். ஒரு நாளைக்கு 3 முறை பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.
4-வது நாள் வைக்கோலை அகற்றி பாத்திகளின் இடையில் நீர் கட்டவும். நாற்று வளர வளர நீர் மட்டம் உயர்த்தப்பட வேண்டும்.
எந்திர நடவு முறை
பாய்நாற்றங்கால் மூலம் வளர்க்கப்பட்ட நாற்றுக்களை 15-20 நாட்களுக்குள் நடவு செய்யவேண்டும். நடுவதற்கு ஒரு நாள் முன்பாக நாற்றங்காலில் நீரை வடித்து விடவேண்டும்.
ஒரு மீட்டர் அகலமுள்ள பாத்தியினை 50 சென்டிமீட்டர் அளவில் நீளவாக்கில் இரண்டாகப் பிரித்துக்கொள்ளவும். நடவு செய்வதற்கு கொரியன் எந்திரத்தில் 24 சென்டிமீட்டர் அகலமுள்ள 4 தட்டுகள் உள்ளன. எனவே, 50 சென்டிமீட்டர் நீளம், 22 சென்டிமீட்டர் அகலம் கொண்ட பாத்திகளை அறுத்து எடுக்கவும்.
அடியில் உள்ள பாலிசாக்கு சேதமாகாமல் எடுக்கவும். நடவு வயலை நன்கு சேறாக்கி சமப்படுத்தவும். 1-2 சென்டிமீட்டர் மெல்லிய நீர் இருந்தால் போதும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 2-3 மணி நேரம் ஆகும். ஏக்கருக்கு நாற்று அமைத்து, நடவு செய்ய ரூ.1000/- ஆகும்.
பயன்கள்:
எந்திர நடவு செய்வதால் மேலான நடவினால் அதிக தூர் கட்டுதல், வேலையாட்கள் தேவை குறைவு.
ஏக்கருக்கு 7 கிலோ விதை மட்டுமே தேவைப்படும். நாற்றங்கால் அமைத்தல், பராமரித்தல் மிக எளிது.