வண்ண மீன் வளர்ப்பில் இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண்மீன்களை அவற்றின் இனப்பெருக்க உறுப்பை கொண்டு அடையாளம் காணலாம்.
ஆண்மீன்களின் இனப்பெருக்க உறுப்பை கோனோபோடியம் என்று அழைப்பார்கள். ஒரு முறை கருவுற்ற பெண்மீன், 5 லிருந்து 6 வாரத்திற்கு ஒரு முறையாக 8 முதல் 10 முறை குட்டியிடும் தன்மை கொண்டது.
கருவுற்ற சினை பெண்மீன்களுக்கு வயிறு நன்கு பருத்திருக்கும். பெண்மீன்களின் குதத்திற்கு அருகில் கருமையான புள்ளி ஒன்று காணப்படும். இவ்விரு அறிகுறிகளையும் வைத்து கருவுற்ற மீன்களை அடையாளம் காணலாம்.
ஒரு நேரத்தில் ஒரு பெண்மீன் 50 குட்டிகள் வரை இடும். குட்டிகளின் எண்ணிக்கை, பெண்மீன்களின் நீளத்தையும், வயதையும் பொறுத்து மாறுபடும். பொதுவாக குட்டியிடும் மீன்களை 5-6 வாரத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்தல் நல்லது.
ஒரே தொட்டியில் ஆணும்,பெண்ணும் சேர்த்து வளர்க்கப்பட்ட மீன்களிலிருந்து சேர்க்கை மூலம் கருவுற்ற பெண்மீன்களை வயிறு பெரிதாக காணப்படுவதன் மூலம் அடையாளம் கண்டு அவற்றை தனியாக பிரித்தெடுத்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
சத்தான குறுணை உணவு, புழு போன்றவற்றை அளித்து வந்தால் 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறையென தொடர்ந்து குட்டிகளை பெற்றுக் கொண்டேயிருக்கும்.
சரியான அளவுள்ள கண்ணாடி தொட்டியை நீரால் நிரப்பி, தேர்வு செய்யப்பட்டுள்ள கருவுற்ற பெண்மீனை தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாய்மீன், குட்டிகளை இடை இடையே வெளியிடும். முழுவதுமாக குட்டிகளை வெளியிட்டதும், தாய்மீனை அப்புறப்படுத்தி விடவேண்டும்.
பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும், குட்டிகளை பெரிய தொட்டிக்கு மாற்றி, குறுணை உணவுடன் மிதவை நுண்ணுயிரிகளையும், புழுக்களையும் அளித்து வரலாம்.
நாற்றாங்கால் குளங்கள் அமைத்து அவற்றில் தகுந்த அளவில், சாணம் மற்றும் ரசாயன உரங்கள் இட்டு, மிதவை நுண்ணுயிரிகளை இருப்பு செய்யலாம். அந்த குளங்களில், பிறந்த இளங்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் துரித வளர்ச்சி அடைய செய்யலாம்.
குட்டியிடும் மீன்கள் தான் ஈன்ற குட்டிகளையே உண்ணும் தன்மை உடையவை. எனவே தாயிடமிருந்து குட்டிகளை காப்பாற்றுவது முக்கியம்.
இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ள பெண்மீன்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. தவறுதலாக கையாள்வதால் குட்டிகள் முழுவளர்ச்சி அடையாமல் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.