1.. எத்தனை வகை மீன் வளர்ப்பு முறைகள் உள்ளன?
நமது நாட்டில் பொதுவாக 5 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் மீன்வளர்ப்பு, குளிர்நீர் மீன்வளர்ப்பு, வண்ண மீன் அல்லது அலங்கார மீன்வளர்ப்பு, மற்றும் கடல்நீர் மீன்வளர்ப்பு என்பவை ஆகும்.
2. மீன் வளர்ப்பைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் யாவை?
நீரின் வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன், (கரியமில வாயு), கார்பன் – டை – ஆக்ஸைடு, மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாவசியமானவை ஆகும்.
3. பிடிப்பு மீன்வளம் என்பது என்ன?
மீன்கள், சுறா, மெல்லுடலிகள், சிங்கிறால் மற்றும் நண்டு போன்றவற்றை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே பிடிப்பு மீன்வளம் ஆகும். நம் நாட்டில் மீன் பிடிப்பு மூலமாக 68 சதம் மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
4. பிற அசைவ உணவுகளை விட மீன் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ஏன்?
தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.
5. மீன் இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை?
மீன்களில் பொதுவாக 60 – 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 – 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 – 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 – 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.
6. கூட்டு மீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏன்?
ஏனெனில் பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்றன. எனவே உற்பத்தி செய்வது எளிது. மேலும் இவை விரைவில் வளர்ந்து பெரிய அளவை அடைந்துவிடுகின்றன.
7. கெண்டை மீனில் எத்தனை வகைகள் உள்ளன?
கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை இந்தியப் பெருங்கெண்டை இனங்கள். வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, மற்றும் சாதாரண கெண்டை போன்றவை அயல்நாட்டு கெண்டைகள். இவற்றில் இந்திய கட்லா இனம் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.
8. மீன்குளம் அமைப்பது பற்றிக் கூறவும்?
ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
9. குளங்களை ஏன் காயவைக்க வேண்டும்?
இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.
10. ஒரு எக்டர்க்கு எத்தனை மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம்?
ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 – 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது.
11. மீன்களை எத்தனை முறை அறுவடை செய்யலாம்?
பொதுவாக தற்போது கடைப்பிடிக்கப்படும் வளர்ப்பு முறைகளில் குளங்களில் விடப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே எடையுடன் சீரான வளர்ச்சியை பெறுவதில்லை. எனவே மீன்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதைவிட அவ்வப்போது வளர்ந்த மீன்களை பகுதி பகுதியாக அறுவடை செய்வது நல்லது. வளர்ந்த மீன்களை அவ்வப்போது அறுவடை செய்வதன் மூலம் குளத்திலுள்ள மீத மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நமது பகுதியில் விற்பனைக்கு உகந்த எடையை மீன்கள் அடையும் போது மீன்களை அறுவடை செய்யலாம். விரால்களை இருப்புச் செய்து வளர்க்கும் பண்ணைகளில், சாதாரணமாக ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
12. குளங்களில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது?
பிராணவாயு பற்றாக்குறைவு ஏற்பட்டால் மீன்கள் அனைத்தும் மேல்மட்டத்திற்கு வந்து சுவாசித்துக் கொண்டு இருக்கும். இத்தகைய நிலை கோடையில் அதிகாலை வேளைகளில் ஏற்படும். இதனை சீர்செய்ய குளத்தில் நீர்மட்டத்தின் ஆழத்தை 41/2 முதல் 5 அடியாக அதிகரிக்கலாம். ஓரளவு அடிமட்ட நீரை வெளியேற்றி விட்டு புதுநீர் பாய்ச்சலாம். மீன்களை கொஞ்சம் அறுவடை செய்து அவற்றின் அடர்த்தியைக் குறைக்கலாம்.
மீன்களின் இருப்படர்த்தியை கட்டுப்படுத்துதல், நீரின் ஆழத்தை உகந்த நிலையில் பராமரித்தல் மற்றும் அடிமட்ட நீரை ஓரளவு வெளியேற்றி புதுநீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு நீரின் தரத்தைப் பராமரிக்கலாம்.
13. மனிதர்கள் பயன்படுத்தும் பொதுக்குளங்களில், சாண மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க முடியவில்லை. இக்குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அரிசித் தவிடு, கடலைப்பிண்ணாக்கு, சோளமாவு, சோயாமாவு, குறுணை போன்ற பொருட்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட மேலுணவினை, குளத்தில் இருக்கும் மீன்களின் மொத்த எடையில், சுமார் 2 – 3 விழுக்காடு ஒரு நாளுக்கு என்ற அளவில், தினசரி அளித்திடல் வேண்டும்.
மக்கள் பயன்படுத்தும் குளங்களில், நீர் நிறைந்துள்ள காலங்களில் பொதுவாக சாணமோ, சுண்ணாம்போ போட முடிவதில்லை. எனவே, குளத்தில் நீர் சேரும் காலத்திற்கு முன்பே லேசான ஈரப்பதத்தில் உழவு செய்து எக்டருக்கு 200 கிலோ என்ற அளவில் காளவாய் சுண்ணாம்பு இடுவது நல்லது.
கழிவுகள் அதிகளவில் சேரும் குளங்களுக்கு எக்டருக்கு 400 முதல் 500 கிலோ அளவிற்கு சுண்ணாம்பின் அளவை அதிகரிக்கலாம். குளங்களில் ஆழமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேர்ந்துள்ள பகுதிகளிலும் கூடுதலாக சுண்ணாம்பு இட வேண்டும்.