கண்ணுக்கு அழகான, விதவிதமான வண்ணங்களை கொண்ட சிறுமீன்களை கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. உயிருள்ள காட்சி பொருளாக இருப்பதால் இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன.
அலங்கார மீன்களை பொழுது போக்கிற்காக வளர்த்த காலம் மாறி அது நல்ல தொழிலாக மாறியிருக்கிறது. இந்த மீன்களை இனப்பெருக்க அடிப்படையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் மற்றும் குட்டியிடும் மீன்கள் என்று பிரிக்கலாம்.
குட்டியிடும் மீன்களில் கப்பீஸ், மோலி, பிளாட்டி மற்றும் வாள்மீன்கள் முக்கியமானவை.
கப்பீஸ்
இதில் ஆண்மீன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு,நீலம் மற்றும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த மீன்களை பராமரிப்பது எளிது. அதிகமான வெப்பநிலையை தாங்கி வளரும். ஆண்மீன்கள் 2.5 சென்டிமீட்டர்நீளம் வரையிலும், பெண்மீன்கள் 5 செ.மீ நீளமும் வளரக்கூடியது.
பெண்மீன்கள் 2.5 செமீ மற்றும் ஆண்மீன்கள் 2 செ.மீ வளர்ந்தவுடன் இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. இந்த மீன்கள் நன்கு வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் 22 முதல் 24 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காரஅமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருப்பது நல்லது.
இந்த மீன்கள் 4 லிருந்து 6 வாரத்திற்குள் குட்டியிடும். பெண்மீன்கள் தாமாகவே தொடர்ந்து குட்டியிடும் தன்மையுடயவை. அலங்கார மீன்வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் முதலில் இந்த வகை மீன்களை வளர்ப்பது நல்லது.
மோலி
இந்த மீன்கள் 9 செமீ வரை உப்புத்தன்மையுடைய தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. 24 முதல் 28 சென்டிகிரேட் வெப்பநிலையில் வளரும். இவை தாவர வகை உணவுகளையே விரும்பி உண்ணும். மோலி வளர்க்கும் தொட்டிகளில் ஒரளவு சூரிய ஒளி படும் வகையில் இருந்தால் பச்சை பாசிகள் வளரும்.
இது மீன்களுக்கு உணவாகும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 முதல் 5 பெண்மீன்களை விடுவது நல்லது. இவை 5 முதல் 10 வார இடைவெளியில் குட்டிகள் போடும். இதில் சில்வர் மோலி, கருமோலி, வெள்ளைமோலி, ஆரஞ்சு மோலி, சாக்லேட் மோலி, செயில் துடுப்பு மோலி ஆகியவை முக்கியமானதாகும்.
பிளாட்டி
பளிச்சிடும் சிவப்பு, பச்சை, நீலப்பச்சை ஆகிய நிறங்களில் பிளாட்டி மீன்கள் காணப்படுகின்றன. ஆண்மீன்கள் 3.8 செ.மீ வளரும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 பெண்மீன்கள் விடுவது நல்லது. இவை 3,4 வரை இடைவெளியில் குட்டியிடுகின்றன.
வாள்வால்
பிளாட்டி மீனை போன்று இருக்கும் இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண்மீன்களில் வால்துடுப்பு, வாள் போன்று நீட்டிக் கொண்டிருக்கும். ஆண்மீன்கள் 8.3 செ.மீ, பெண்மீன்கள் 12 செ.மீ நீளம் வரையும் வளரக்கூடியன. பெண்மீன்கள் 5 செ.மீ நீளத்திற்கு வளரும் போது இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. உயிர் உணவுகளையும், தாவர உணவுகளையும் விரும்பி உண்ணும்.
இந்தவகை மீன்களை வளர்த்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.