புற ஊதா கதிர் மூலம் வேலை செய்யும் தானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படும் பொறிகள் இக்கருவியில் புற ஊதாக்கதிர்களை வெளியிடும் 4 வாட்ஸ் திறனுடைய ஒரு விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த விளக்கு 250 நேனோ மீட்டர் அலைநீளமுடைய புற ஊதாக்கதிர்களை அதிகப்பட்சமாக வெளியிடும். இந்த விளக்கு மேல்பகுதியில்310 மிமீ விட்டமும் அடிப்பகுதியில் 35 மிமீ விட்டமுமுடைய ஒரு புனலின் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த புனலின் அடிப்புறத்தில் ஒரு கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டி அல்லது கலன் பூச்சிகளை பிடிப்பதற்கு இருக்கும். தேவைப்பட்ட இடங்களில் இந்தக் கருவியினை தொங்கவிடுவதற்காக மூன்று கொக்கிகள் புனலின் வெளிப்புறத்தில் இருக்கும்.
இந்தக் கருவியுடன் மூன்று கால்களையுடைய ஒரு ஸ்டேண்டும் இருக்கும். தானியங்களை சேமித்துவைக்கும் கிடங்குகளின் மூலையில் நிலமட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் இக்கருவி தொங்கவிடப்பட்டிருக்கும். ஏனெனில் பூச்சிகள் சாயங்கால நேரங்களில் சேமிப்புக்கிடங்கின் மூலைக்கு செல்லும் குணமுடையவை.
இக்கிடங்குகளில் இப்பொறி இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இந்த விளக்கு பொறி நெல்லைத் தாக்கும் பூச்சிகளான தானியங்களை ஓட்டை போடும் பூச்சி (Rhyzopertha dominica), சிவப்பு மாவு பூச்சி (Tribolium castaneum), ரம்ப்பல் பூச்சி (Oryzaephilus surnamensis) போன்றவற்றை அதிகம் பிடிக்க உதவுகிறது.
இதுமட்டுமன்றி சோசிட்ஸ் எனப்படும் சேகரிக்கும் கிடங்குகளில் அதிகமாக தொல்லை ஏற்படுத்தும் பூச்சிகளும் இக்கருவியினால் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. அறுபது மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் மற்றும் 5 மீட்டர் உயரமுடைய கிடங்குக்கு 2 புற ஊதாக்கதிர் விளக்குகள் தேவைப்படும்.
இப்பொறி அதிக நாட்களுக்கு தானியங்களை சேகரிக்கும் கிடங்குகளுக்கும், ஏற்கெனவே பூச்சி தாக்குதலுக்குள்ளான தானியங்களிலுள்ள அதிக எதிர்ப்புத்திறனுடைய பூச்சிகளை பிடிப்பதற்கும் உதவுகின்றன. அடிக்கடி தானியங்களை சேகரித்து பின்பு மாற்றும் கிடங்குகளில் இப்பொறிகள் பூச்சிகளை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
வேலை செய்யும் திறன் : 60 மீ நீளமும் 20 மீட்டர் அகலமும் 5 மீ உயரமுடைய ஒரு கிடங்கில் மற்ற பரிசோதனைகளில் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதே கிடங்குகளில் இக்கருவியினை உபயோகிக்கும்போது ஒரு நாளைக்கு 200 பூச்சிகள் இக்கருவியின் மூலம் பிடிபட்டன.
இதன்மூலம் இதன் திறன் வெளிப்படும். ஒரு நெல் சேமிப்புக்கிடங்கில் ஒரு கருவியின் மூலம் ஒரு நாளில் 3000 ரைசோபெர்த்தா டொமைனிக்கா எனும் பூச்சி பிடிக்கப்பட்டுள்ளது.