வெற்றிலையைத் தாக்கும் வேர் அழுகல் நோய்...
இந்நோய் ஒருவகை பூசணத்தால் ஏற்படுகிறது. வெள்ளைக்கொடி மற்றும் கற்பூரி என்ற ரகங்களில் அதிகமாக இந்நோய் தாக்குதல் காணப்படும்.
இந்நோயின் முதல் அறிகுறியாக வெற்றிலைக் கொடிகள் திடீரென காய்ந்து விடும். கொடியின் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழ்நோக்கி தொங்கிவிடும். கொடிகள் மூன்று நாட்களுக்குள் காய்ந்து விடும். நோய் தாக்குதலுக்கான கொடியின் தண்டுகளில் நீர்கோத்த புள்ளிகள் தோன்றும்.
பின்னர் இப்புள்ளிகள் பழுப்பு நிறமாக மாறி தண்டு முழுவதும் பரவும் தன்மைக் கொண்டது. இதனால் கொடியின் வேர் பகுதி அழுகி தூர்நாற்றம் வீசும். மழை காலங்களில், நீர் வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
ஒராண்டு வயதுள்ள தரமான, நோய் தாக்காத விதைக் கொடிகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்கொடிகளை 0.25 சதவீதம் போர்டோ கலவையில் 20 நிமிடங்கள் நனைய வைத்து நடவு செய்யலாம்.
அழுகல் நோய் தோன்பட்ட கொடிகளில் 0.25 சதவீதம் போர்டோ கலவை அல்லது காப்பர் அக்ஸிகுளோரைடு மருத்தினை 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்கலாம். மழை காலங்களில் நீர் தேங்காதவாறு வடிகால் வசதிகளை ஏற்படுத்தலாம்.
இலைப்புள்ளி நோய், கருந்தாள் நோய்: முதலில் ஈரக்கசிவுடன் கூடிய புள்ளிகள் இலைகளின் அடிப்பகுதியில் தோன்றும். பின்னர் இப்புள்ளிகள் பெரிதாகி இலையின் மேற்புறத்துக்கு பரவும். இந்நோயால் பாதிக்கப்பட்ட தண்டுகள் அழுகி பின்னர் கொடி காய்ந்து விடும்.
அதிகமாக காணப்படும் மேகமூட்டம், விட்டுவிட்டு மழை பெய்தல், அதிக அளவு தொடர்ந்து மழை பெய்தல் போன்ற பருவகாலங்களில் இந்நோய் அதிகமாக தாக்கும். மழை நீர் மற்றும் பாசன நீரின் மூலம் இந்நோய் பரவும் தன்மைக் கொணடது.