பழம்பெரும் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், 2005-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் சச்சின்.
வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் கலைப்புலி எஸ் தாணு சச்சின் படத்தை தயாரித்திருந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தளபதி விஜய் ஹீரோவாக நடித்த இப்படத்தில், ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
துருதுருவென இருக்கும் ஹீரோ, கல்லூரியில் கதாநாயகியை பார்த்ததுமே காதலில் விழும் நிலையில்... 30 நாள் சவால் விட்டு அதில் ஹீரோ ஜெயிக்கிறாரா இல்லையா என்பதே கதைக்களம்.
விஜய் இந்த படத்தில் ஒரு காலேஜ் பாய்யாக கலக்கலான ரோலில் நடித்திருப்பார். மேலும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்தது.
நடிகை ஜெனிலியா வழக்கம் போல தன்னுடைய கியூடான அழகால் ரசிகர்களை வசீகரித்தார். ஷாலினி என்கிற கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்திற்கு விஜய் உடன் காமெடியில் கலக்கிய சந்தானம் மற்றும் வடிவேலு படத்திற்கு பலம் சேர்த்தனர்.
இப்படம் 2005-ல் வெளியான போது, கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதலுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது. பின்னர் தொலைக்காட்சிகளில் வெளியாகி தாமதமாக கொண்டாடப்பட்டது.
சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக, இன்று ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ரசிகர்கள் ஆரவாரத்தோடு சச்சின் படத்தை வரவேற்று வருகின்றனர்.
இப்படம் சில இடங்களில் மிகவும் மெதுவாக நகர்வதும், ஏற்கனவே வெளியான காதல் கதைகளை போல் இருப்பதாக கூறப்பட்டதே இப்படம் பெரிய அளவில் பேசப்படாததற்கு காரணம்.
கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆனபோது ரூ.36 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், அந்த வசூலை சச்சின் திரைப்படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.