பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட இந்திய விமானி அபினந்தன் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோக்கள் யூடியூபில் அகற்றப்பட்டன.
பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட இந்திய விமானி அபினந்தன் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோக்கள் யூடியூபில் அகற்றப்பட்டன.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதற்கு பழிவாங்கும் விதத்தில் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதலில் ஏற்பட்டது. பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் விமானத்தை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அதிலிருந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தப்பிக்க முயன்றாபோது அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இதனையடுத்து இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அதில் அவர் காயங்களுடன் தோற்றம் அளிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கிடையே அபிநந்தன் காயமடைந்த வீடியோ காட்சியை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்தது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் 11 வீடியோ லிங்குகளை பதிவேற்றியிருந்தது. அந்த வீடியோக்களை உடனே அகற்ற வேண்டும் என்று கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம், அபிநந்தன் தொடர்பாக பாகிஸ்தான் பதிவேற்றிய 11 வீடியோ லிங்குகளை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.