
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தார்.
இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி இந்தியா வளர்ச்சியடையும் போது, உலகம் முழுவதும் வளரும் என்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் பிரதமர் மோடியின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் பயணம் இன்று தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஹை-டெக் மீட்டிங்கில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நமது ஒத்துழைப்பு நமது சொந்த மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது.” என்றார்.
நமது ஒத்துழைப்பு முக்கியம் - மோடியுடனான ஹை-டெக் மீட்டிங்கில் ஜோ பைடன் பேச்சு!
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பாராட்டு தெரிவித்தார். “இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது.” என கமலா ஹாரிஸை பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்தியா-அமெரிக்க நட்புறவு மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்க குடிமக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு புதிய அத்தியாத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். “இங்கே அமெரிக்காவில், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளது. அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் நாவல்களை நாங்கள் சமோசாவுடன் ரசிக்கிறோம். மிண்டி கலிங்கின் நகைச்சுவைகளைப் பார்த்து நாங்கள் சிரிக்கிறோம். கோச்செல்லாவில் தில்ஜித்தின் இசைக்கு நாங்கள் நடனமாடுகிறோம். யோகா செய்வதன் மூலம் எங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறோம்.” என்றார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை குறித்து, “அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஒன்றாகும். அமெரிக்க-இந்திய கூட்டாண்மை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. பிரதமர் மோடியின் வருகை நமது கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். வளமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க நாம் உழைக்கும்போது, நமது நாடுகள் ஒன்றாக எதிர்காலத்தை வடிவமைக்கும்” என்று கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “உண்மையிலேயே இந்த நூற்றாண்டுக்கான மகத்தான ஆற்றலை நமது கூட்டாண்மை கொண்டுள்ளது. எதிர்காலத் துறைகளில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நான் ஆர்வமாக உள்ளேன்.” என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அளித்த அரசு விருந்தில் கமலா ஹாரிஸும் கலந்து கொண்டார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வேர்களைக் கொண்ட லட்சக்கணக்கானோர் இங்கு உள்ளனர். அவர்களில் சிலர் இந்த அறையில் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். எனக்குப் பின்னால் சரித்திரம் படைத்த ஒருவர் இருக்கிறார்.” என கமலா ஹாரிஸை புகழ்ந்து பேசினார்.
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் என்பது கவனிக்கத்தக்கது. இதனை குறிப்பிட்டே பிரதமர் மோடி கமலா ஹாரிஸை புகழ்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு அமர்வில் பேசியிருந்தார்.