பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தில் முன்னாள் அதிபர் பாரக் ஒபமாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபமா கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாரக் ஒபமா, “நான் அமெரிக்க அதிபராக இருந்த போது எதிர்கொண்ட சிக்கலான பல தருணங்களில் ஒன்று ஜனநாயக விரோத தலைவர்கள் மற்றும் சர்வாதிகளுடனான சந்திப்பாகும். அதிபர் எனும் பொறுப்பு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்ததுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் தோழமையாக இருக்கும் சக்திகள் தனிப்பட்ட முறையில் எனக்கு அழுத்தங்களை கொடுக்கும். சீனாவை எடுத்துக்கொண்டால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில் ஏராளமான பொருளாதார நலன்கள் உள்ளன. இப்படியான தருணங்களில் அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும்.
அல்லது சரிபடாத விஷயங்களை எதிர்க்க வேண்டும். இதுவும் அதிபராக இருந்த காலத்தில் நான் எதிர்கொண்ட சவாலாகும். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும். நான் நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் உரையாடி இருந்தால், ”இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை, ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும்.
அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என்று கூறினார் பாரக் ஒபமா. இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பிரதமர் மோடி. பாரக் ஒபமாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “இந்தியா ஜனநாயகமானது என்று மக்கள் சொல்வதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
சிலர் வேண்டாம் என்று சொன்னாலும் இந்தியா ஜனநாயக நாடுதான். அதிபர் ஜோ பைடன் சொன்னதை போல, ஜனநாயகம் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் டிஎன்ஏவில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றியே வாழ்கிறோம். நமது அரசியல் சாசனமும், நமது அரசாங்கமும், ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்தியாவில் சாதி, மத பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று பிரதமர் மோடி பாரக் ஒபமாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.