நமது ஒத்துழைப்பு முக்கியம் - மோடியுடனான ஹை-டெக் மீட்டிங்கில் ஜோ பைடன் பேச்சு!

By Manikanda Prabu  |  First Published Jun 23, 2023, 11:05 PM IST

முழு உலகிற்கும் நமது ஒத்துழைப்பு முக்கியமானது என பிரதமர் மோடியுடனான ஹை-டெக் மீட்டிங்கில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்


அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் சிறிது நேரம் தனிமையில் கலந்துரையாடினர்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்ப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்க உறவுகள் முழு உலகிற்கும் உத்வேகம் அளிப்பதாகவும், இந்தியா வளர்ச்சியடையும் போது, ​​உலகம் முழுவதும் வளரும் என்றார். இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு பிறகு, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் மூன்றாவது உலகத் தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிகாலத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார்.

முன்னதாக, அதிபர் ஜோ பைடன்  மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், பிரதமரும் நானும் ஜனநாயக மதிப்புகள் குறித்து விவாதித்தோம் என்றார்.

அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு சார்பில் நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதில், முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, ஆனந்த் மகேந்திரா, கூகுள் சி.இ.ஓ., சுந்தர்  பிச்சை அவரது மனைவி உள்ளிட்ட பலதரப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

AI-க்கு அமெரிக்க காங்கிரஸ் அவையில் புதிய அர்த்தம் கொடுத்த பிரதமர் மோடி; எழுந்து நின்று கைதட்டிய எம்பிக்கள்!!

இந்த நிலையில், தனது அமெரிக்க பயணத்தின் கடைசி நாளான இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஹை-டெக் மீட்டிங்கில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் கூக், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் அனந்த் மகேந்திரா, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், 5ஜி, 6ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நமது ஒத்துழைப்பு நமது சொந்த மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது.” என்றார். “நமது கூட்டாண்மை என்பது அடுத்த நிகழ்வு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை விட அதிகமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை சமாளிப்பது, பிரபஞ்சத்தை ஆராய்வது, மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது, தொற்றுநோய்களைத் தடுப்பது மற்றும் நமது குடிமக்களுக்கு உண்மையான வாய்ப்பை வழங்குவது.” உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ என்றார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்க துணை அதிபட்ர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கவுள்ளார். அதனை முடித்துக் கொண்டு, ஜான் எஃப் கென்னடி பெர்பார்மிங் ஆர்ட்ஸ் மையத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதில், சுமார் 1200 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. அதன்பிறகு, வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, நியூயர்க் நகரில் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி, வாஷிங்டனின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்களையும் சந்தித்தார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பிரதமர் மோடி இன்று தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து அப்படியே  எகிப்து நாட்டுக்கு செல்லவுள்ளார்.

click me!