டெல்லியில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவில்லை என்ற செய்தி ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடப்பு வார இறுதியில் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜி20 மாநாடு தொடர்பான பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்ட அமர்வுகள் பல்வேறு தலைப்புகளில் நடந்தன. இதற்காக டெல்லியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து டெலாவேரில் செய்தியாளர்கள் அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும், அவரை நான் சந்திக்க இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு: 207 ரயில்களை ரத்து செய்த இந்திய ரயில்வே!
ஆனால், ஜி ஜின்பிங்கை அடுத்து எங்கு சந்திக்க இருக்கிறார் என்பது குறித்து ஜோ பைடன் குறிப்பிடவில்லை. சான் பிரான்சிஸ்கோவில் வரும் நவம்பர் மாதம் நடக்கும் அபெக் மாநாட்டில் ஜி ஜின்பிங்கை ஜோ பைடன் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்குக் காரணம் எல்லையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் பதற்றம் என்று கூறப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக பிரதமர் லி சியாங் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்தோனேஷியாவின் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டில் ஜோ பைடன், ஜி ஜின்பிங் சந்தித்து இருந்தனர். இந்த நிலையில் சீன உளவு பலூன் அமெரிக்காவை கடந்த சென்ற விஷயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தைவான் விஷயத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் வந்து சென்றது, தைவான் அதிபரின் அமெரிக்க பயணம், பைடனின் குறைக்கடத்தி தொழில்நுட்பம் மீதான ஏற்றுமதி தடைகள், கியூபாவில் இருந்து சீன கண்காணிப்பு மற்றும் பலூன் உளவு அனைத்தும் இரண்டு நாடுகளுக்கும் இடையே மேலும் மேலும் கசப்புணர்வை வளர்த்து வந்துள்ளது.
2047 வரை இந்தியாவுக்கு ஏராளமான நல்வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஜி20 உச்சிமாநாடு!