உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான இந்த நடவடிக்கையில் பங்கேற்க, இந்திய விமானப்படை (IAF) குழு பிரைட் ஸ்டார் (BRIGHT STAR-23) பயிற்சியில் பங்கேற்க எகிப்திய விமானப்படை தளத்தை அடைந்துள்ளது.
பிரைட் ஸ்டார் - 23 (BRIGHT STAR-23) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா - எகிப்து கூட்டு ராணுவப் பயிற்சியின்போது, இந்திய விமானப்படையின் IL-78 விமானம் நடுவானில் எகிப்திய விமானப்படை விமானத்துக்கு எரிபொருள் நிரப்பியதாக இந்திய விமானப்படைக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ட்விட்டர் இதுபற்றி பதிவிட்டுள்ள இந்திய விமனாப் படை, "நட்பின் பிணைப்பைக் காட்டும் வகையில், பிரைட் ஸ்டார் பயிற்சியின்போது எகிப்து வானத்திற்கு இந்திய விமானப்படை IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் எகிப்திய விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியது" எனக் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான இந்த நடவடிக்கையில் பங்கேற்க, இந்திய விமானப்படை (IAF) குழு பிரைட் ஸ்டார் (BRIGHT STAR-23) பயிற்சியில் பங்கேற்க எகிப்திய விமானப்படை தளத்தை அடைந்துள்ளது.
கெய்ரோவில் உள்ள எகிப்திய விமானப்படை தளத்திற்குச் சென்றிருக்கும் இந்திய விமானப்படை குழு, அடுத்த மூன்று வாரங்களுக்கு அங்கு தங்கி கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கா, சவுதி அரேபியா, கிரீஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் விமானப்படை குழுக்களும் பங்கேற்கும்.
கெய்ரோ (மேற்கு) விமானப்படை தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பலதரப்பு முப்படை பயிற்சியில் இந்தியா விமானப்படைக் குழு பங்கேற்கும். இது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி முடிவடையும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் 5 MiG-29, 2 IL-78, இரண்டு C-130 மற்றும் இரண்டு C-17 விமானங்கள் உள்ளன. இந்திய விமானப்படையின் சிறப்புப் படையைச் சேர்ந்த பணியாளர்களும், 28, 77, 78 மற்றும் 81வது படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்பார்கள்.
இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்கும் விமானப்படை குழுவினர் விமானப்படை உடைகளில் இருந்தாலும் இந்தியாவின் தூதர்களாக செயல்படுவார்கள் என்றும் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவும் எகிப்தும் பாரம்பரியமாக நல்ல உறவையும் ஆழமான ஒத்துழைப்பையும் கொண்டிருக்கின்றன. 1960களில் இந்திய விமானப்படை மூலம் எகிப்திய விமானிகளுக்கு ஏரோ-எஞ்சின் பயிற்சி அளிக்கப்பட்டது.
இரு நாடுகளின் விமானப்படைத் தளபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் அண்மையில் எகிப்துக்கு மேற்கொண்ட பயணங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையே கூட்டுப் பயிற்சியை மேம்படுத்தியுள்ளன.