உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு!

Published : Jun 04, 2023, 12:16 PM IST
உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு!

சுருக்கம்

உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் சிங்கப்பூரில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உலக நாடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட முக்கிய புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்கிரி-லா பாதுகாப்புக் கூட்டத்திற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அதில் பங்கேற்ற அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற கூட்டங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாதுகாப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே இத்தகைய கூட்டங்கள் ரகசிய இடத்தில் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், இந்த ரகசிய சந்திப்புகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்த சந்திப்பின் முக்கியத்துவம் கருதி அவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை.

அமெரிக்கா சார்பில் அந்நாட்டு பிரதிநிதியாக தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் சீனா உள்ளிட்ட உலகின் வல்லாதிக்க நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பாக ‘ரா’ தலைவரான சமந்த் கோயல் கலந்து கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. International shadow agenda என்று சொல்லப்படக்கூடிய சர்வதேச நிழல் நிகழ்ச்சி நிரலில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான அங்கமாகும் என இதுகுறித்த விவரங்கள் அறிந்த ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளின் அடிப்படையில், இந்த சந்திப்பானது முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருக்கலாம் எனவும், நாடுகளிடையே ஆழமான புரிதலை ஊக்குவிக்கும் ஒரு வழியாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை சேவைகளுக்கென தனித்த நடவடிக்கைகள் உள்ளன. வெளிப்படையான இராஜதந்திர நடவடிக்கைகள் கடினமாக இருக்கும் போது இத்தகைய சந்திப்புகள் நடைபெற வாய்ப்புள்ளது. இத்தகைய சந்திப்புகள் பதற்றமான காலங்களில் முக்கியமானது. சிங்கப்பூர் நிகழ்வு இதனை ஊக்குவிக்க உதவுகிறது எனவும் இந்த விவரங்களில் பரிட்சயமான அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஷங்ரி-லா உரையாடலில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், “உளவுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பங்கேற்பாளர்கள் தங்கள் சகாக்களை சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார். இந்த இருதரப்பு அல்லது பலதரப்பு சந்திப்புகளில் சிலவற்றை சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம்  எளிதாக்கலாம் எனவும், மாநாட்டுக்கு இடையேயான இந்த சந்திப்புகளை பிரதிநிகள் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. சீன மற்றும் இந்திய அரசாங்கங்களும் இதுகுறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. உளவுத்துறை சேவைகளின் இத்தகைய பெரிய சந்திப்புகள் அரிதானவை, அவை ஒருபோதும் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!