உலக அளவில் கடந்த வாரம் கொரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்காவில் மிக அதிக கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது. உலக அளவில் டிசம்பர் 20 முதல் 26-ம் தேதிவரை 49.90 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதாவது 28.40 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு எண்ணிகை முந்தைய வார நிலவரத்தை விட 3% அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 14.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 39 சதவீதம் அதிகமாகும். ஒரு லட்சம் பேருக்கு கிட்டதட்ட 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பாதிப்பு உலக அளவில் 2-வது மிகப்பெரிய தொற்று வீகிதமாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வாராந்திர அறிக்கையில், அமெரிக்காவில் மட்டும் கடந்த வாரத்தில் 34% தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் கடந்த வாரத்தில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 2.75 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாடுகளில் டெல்டா வகை வைரஸ்தான் அதிகமாகப் பரவி இருந்தாலும், ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல பிரிட்டன், டென்மார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் மூலம் நோயின் தீவிரம், ஆக்சிஜன் பயன்பாடு, வென்டிலேட்டர் சிகிச்சை தேவை, தடுப்பூசி செலுத்தியபின் பாதிப்பின் தீவிரம், தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் பாதிப்பின் தீவிரம் ஆகியவற்றை அறிய இன்னும் அதிகமான தரவுகள் தேவைப்படுகின்றன.அதேசமயம், உலக அளவில் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிகை 781 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு தற்போது 21 மாநிலங்களில் பரவியுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் 302 பேர் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.40 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 143.15 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.