ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து விதமான தடகளப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு உலக தடகள கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து விதமான தடகளப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு உலக தடகள கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் 2வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவிக்கும் நிலையில் பல்வேறு பொருளாதார தடைகளும் விதித்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து விதமான தடகளப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு உலக தடகள கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. ஓமனில் வரும் மார்ச் 4 ஆம் தேதி உலக தடகள நடைப்பந்தய சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டு துறைகளில் இருந்தும் ரஷ்யா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ரஷ்ய தேசிய அணி உட்பட அந்த நாட்டின் எந்த அணிகளும் உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.