இலங்கையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நிதி பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வரும் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றபின், நடைபெறும் இந்தத் தேர்தல் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், வாக்குச் சீட்டு அச்சடிப்பதற்கும், எரிபொருள் வாங்குதல், வாக்குச் சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றுக்கு அரசு கருவூலம் நிதி வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று நான் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தேன். ஆனால், அரசாங்கம் தேவையான நிதியை விடுவிக்காததால் எங்களால் அதைச் செய்யமுடியாது என்று இப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கே அரசின் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார்.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதாகத் தகவல்
கோத்தபய ராஜபக்சவிற்குப் பின் அதிபர் பதவிக்கு வந்த விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற கடன் சுமையைச் சமாளிக்க வரிகளை உயர்த்தியும் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்தும் நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அரசு தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தேர்தலை எதிர்கொள்ள மறுக்கிறது என்று குற்றசாட்டினர்.
தேர்தல் நடத்த மறுப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்றும் ரணில் விக்கிரமசிங்கே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதைத் இலங்கை அரசாங்கத்திடம் அதற்குரிய நிதி இருக்குமா என்பது தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு நடத்த சுமார் அந்நாட்டு ஒரு கோடி (இலங்கை) ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 22.7 லட்சம் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2.2 கோடி பேர் வசிக்கும் இலங்கையில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலை அபரிமிதமாகக் கூடியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை உள்ளது.