அமெரிக்கா இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? ஜோ பைடனுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமையுமா?

By Dhanalakshmi G  |  First Published Nov 9, 2022, 4:47 PM IST

தற்போது நடந்து முடிந்து இருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இந்த இடைத்தேர்தல் வாழ்வா? சாவா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, இந்த தேர்தல் அடுத்த அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைப் பிடித்தால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைப் பொருத்தமட்டில் இரண்டு முறை தேர்தல் நடக்கும். ஒன்று அதிபரை தேர்வு செய்வதற்கு. மற்றொன்று நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஆகும். அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும். இந்த இடைத்தேர்தல் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இடைத்தேர்தலில் ஏற்கனவே பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும், செனட் சபையில் இருக்கும் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்களித்துள்ளனர். 36 மாநிலங்களுக்கான ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தற்போது சபையில் 220 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், 212 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். மூன்று இடங்கள் காலியாக இருக்கின்றன. செனட்டில் இரண்டு கட்சிகள் சார்பில் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு சுயேட்சை உறுப்பினர்களும் அடங்குவர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணை அதிபரான கமலா ஹாரிஸ் சமநிலை வாக்காளராக திகழ்வார். 

செனட்டில் இரண்டு அவைகள் உள்ளன. அதாவது செனட் மேலவை, செனட் கீழவை பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அவைகளின் முடிவுதான் 118வது அமெரிக்க காங்கிரசின் தலையெழுத்தை முடிவு செய்யும்.

Elon Musk: எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

அதனால்தான், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், ஆளும்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறதா அல்லது சாதகமாக இருக்கின்றனரா என்பது தெரிந்து விடும்.  மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்கான ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.  எந்தளவிற்கு மக்கள் ஜோ பைடனின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்து இருக்கின்றனர் என்பதற்கும் அடுத்து வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சியினர் இந்த தேர்தலில் அமெரிக்க காங்கிரசை கைப்பற்றி விடலாம் என்று நம்பியுள்ளனர். இதற்குக் காரணம், நவீன அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு இடைத் தேர்தலாக இருந்தாலும் அது ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது வாக்காளர்கள் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். முன்னணியில் இருப்பது பொருளாதாரம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, கருக்கலைப்பு, பெண்கள் உரிமை, குற்றங்கள்,  துப்பாக்கி வன்முறை, குடியேற்றம், கல்வி, பருவநிலை மாற்றம், வெளிநாட்டுக் கொள்கைகள், முக்கியமாக உக்ரைன் ரஷ்யா போர் போன்ற முக்கிய விஷயங்களை எடை போட்டே மக்கள் தங்களது வாக்குகளை அளித்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் கருக்கலைப்புக்கான உரிமை வழங்குதல் ஆகியவற்றை ஜனநாயகக் கட்சி முக்கியமாக  எடுத்துக் கொண்டன. மேலும், பருவநிலை மாற்றம், துப்பாக்கி பயன்பாடு கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், எதிர்கட்சியான குடியரசுக் கட்சி பணவீக்கம், குற்றங்கள், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை முக்கியமானவையாக பார்க்கிறது. 

Meta Layoffs 2022: பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

சமீபத்தில் என்பிசி தொலைக்காட்சி நடத்தி இருந்த கருத்துக் கணிப்பில் அதிபர் ஜோ பைடனுக்கு ஆதரவாக 21 சதவீதம் பேரும், நாடு தவறான வழியில் செல்கிறது என்று 72 சதவீதம் பேரும் தெரிவித்து இருந்ததாக செய்தி வெளியானது. ஜோ பைடன் ஆட்சியில் 13 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து இருக்கிறது என்றும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அளித்தால், தனக்கு மேலும் நம்பிக்கை அளித்து முக்கிய விஷயங்களில் தைரியமான, திறமையான முடிவுகளை எடுக்க முடியும் என்றும், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறி வருகிறார்.

ஆனால், எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் ஜோ பைடனுக்கு சிக்கல் ஏற்படும். பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம். ஜோ பைடனின் குடும்பத்தினர் மீது வழக்குகள் தொடுக்கலாம். இப்படி பல்வேறு வழிகளில் பைடனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். 

இடைத்தேர்தலில் மசாசூசெட்ஸ், மேரிலேண்ட் ஆகிய மாநிலங்களில் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் ஆளுநர்களாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. புளோரிடா மாநிலத்தை டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பிடித்துள்ளது.  

கடந்த ஜூன் மாதத்தில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் புதிய நாடு தழுவிய சட்டங்களை ஆதரித்து இருந்தனர். அதில் முக்கியமானது கருக்கலைப்பு சட்டம். அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்தது. கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதாக ஜனநாயகக் கட்சியினர் உறுதியளித்துள்ளனர். ஆனால், குடியரசுக் கட்சியினர் 15 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்புக்கு தேசிய தடை விதிக்க வேண்டும் கூறி வருகின்றனர். இதுவும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

தற்போது வரை வாக்குகள் எண்ணப்பட்டதில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது. பிரதிநிதிகள் சபையில் இந்தக் கட்சி 199 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் ஜோ பைடனின் குடியரசுக் கட்சி 172 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை. வரும் வியாழக்கிழமை எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரிந்துவிடும்.

click me!