டெக்சாஸ் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும். ஆனால் வெதுவெதுப்பான நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். தண்ணீரின் வெப்ப அளவு 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது அதில் ஆக்ஸிஜன் குறைகிறது. அதை விட முக்கியமாக ஆழமான தண்ணீரை விட ஆழமற்ற பகுதியில் உள்ள தண்ணீர் அதிவேகத்தில் வெப்பமடையும். அந்த பகுதியில் தண்ணீர் செல்லும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீன்கள் பாதிப்படைந்து, ஒழுங்கற்ற முறையில் அதிவேகமாக, இயல்புக்கு மாறாக செயல்படும். இதனால் ஆக்ஸிஜன் அளவு மேலும் குறைந்து மீன்கள் இறந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடற்கரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், ஒளிச்சேர்க்கையைப் பயன்படுத்தி தண்ணீரில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இந்த செயல்முறை சூரிய ஒளியால் இயக்கப்படுகிறது என்பதால், மேகமூட்டம் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்வெஸ்டனில் உள்ள டெக்சாஸ் ஏஎம் பல்கலைக்கழகத்தின் கேட்டி செயிண்ட் கிளேர் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் கடல் நீர் அதிக அளவு வெப்பமடைந்து வருகிறது. இதன் பாதிப்பு சூழலியல் மாற்றத்தை உருவாக்கலாம் என்றார்.
செத்த மீன்களில் இருந்து தொற்று பரவும் அபாயம் உள்ளது. மீனின் கூர்மையான முட்கள் கடற்கரை மன்னில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து மீன்களும் அப்புறப்படுத்தும் வரை உள்ளூர் கடற்கரைகளுக்கு வர வேண்டாம் என குயின்டானா பீச் கவுண்டி பார்க், பொதுமக்களை எச்சரித்துள்ளது.
Viral video நீங்க நம்பலனாலும் இதான் உண்மை: பாம்பை தின்ற மான்!
இறந்த மீன்களில் பெரும்பாலானவை வளைகுடா மென்ஹேடன் வகையை சார்ந்தவை. அவை கூட்டமாக பயணிக்கும் வழக்கம் கொண்டவை. எனவே, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா மென்ஹேடன் வகை மீன்கள் தண்ணீரில் உள்ள அசுத்தங்களை உட்கொள்கின்றன. கடல் பறவைகள், சுறாக்கள் மற்றும் கானாங்கெளுத்தி மற்றும் கடல் ட்ரவுட் உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்களுக்கு இதுபோன்ற சிறிய மீன்கள் இரையாகின்றன. இரையாகும் இந்த மீன்கள் அவைகளுக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.