அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிரான Los Angeles போராட்டம் வெடித்தது ஏன்?

Published : Jun 10, 2025, 10:18 AM ISTUpdated : Jun 10, 2025, 10:27 AM IST
Los Angeles protest

சுருக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறிகள் மீதான கைது நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, தேசியப் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில், குடியேறிகள் மீதான கைது நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தேசிய பாதுகாப்புப் படையினர் (National Guard) லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் (Los Angeles Protest) தீவிரமடைந்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் குடியேறிகள் மீதான அதிரடி கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் அந்நகரில் குடியேற்ற அமலாக்கப் பிரிவினரால் (Immigration and Customs Enforcement - ICE) நடத்தப்பட்ட சோதனைகளில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் கைது செய்யப்பட்டதே இந்த போராட்டங்களுக்கு உடனடி காரணமாகும். கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, அமைதியாக வசித்துவந்த குடியேறிகளும் உள்ளனர் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், அதிபர் டிரம்ப், கலிபோர்னியா மாகாண கவர்னர் கெவின் நியூசோம் (Kevin Newsom) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரன் பாஸ் (Karen Bass) ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி, தேசிய பாதுகாப்புப் படையினரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்ப உத்தரவிட்டார். இது போராட்டம் மேலும் தீவிரம் அடையக் காரணமாக அமைந்தது. மாகாண அரசின் அனுமதி இன்றி மத்தியப் படைகளை அனுப்பியது "மாகாண இறையாண்மையை மீறும் செயல்" என்று கலிபோர்னியா கவர்னர் நியூசோம் கடுமையாக கண்டித்துள்ளார்.

வன்முறை வெடித்தது எப்படி?

ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள், தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட பிறகு வன்முறையாக மாறின. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து, வாகனங்களுக்கு தீ வைத்து, கட்டிடங்களை சேதப்படுத்தினர். குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தலைமையகம் மற்றும் அமெரிக்க நீதிமன்றம் போன்ற கட்டிடங்களில் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஒலிக்குண்டுகளை (flash-bangs) பயன்படுத்தினர். பதிலுக்கு, போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பிற பொருட்களை காவல்துறையினர் மீது வீசியுள்ளனர்.

சில பகுதிகளில், குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதிகளான பாரமவுண்ட் (Paramount) மற்றும் காம்ப்டன் (Compton) போன்ற பகுதிகளில், கடைகளும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கண்டனம்

தேசிய பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள  லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரன் பாஸ், "இது நிர்வாகத்தால் தூண்டப்பட்ட குழப்பம். இது பொது பாதுகாப்பைப் பற்றியது அல்ல, மற்றொரு உள்நோக்கம் கொண்டது" என்று கூறியுள்ளார். கலிபோர்னியா மாகாணம், டிரம்பின் தேசிய பாதுகாப்புப் படை அனுப்பும் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இதுவரை லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான குடியேறிகளின் கைது நடவடிக்கை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. பல அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!