அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கும் நிலையில், கனடா, பனாமா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு பனாமா மற்றும் டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவுடனான வர்த்தக உறவுகளையும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை பொருளாதார மற்றும் புவியியல் ரீதியாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை வைத்து இருக்கிறார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி 20, 2025 அன்று வாஷிங்டன், டி.சி.யில் பதவியேற்கிறார். இந்த விழா அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸ் டிரம்ப்புடன் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்கிறார்.
கனடா, பனாமா, கிரீன்லாந்து:
பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பே அதிரடியான அறிவிப்புகளை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் பனாமா, கிரீன்லாந்து இணைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இத்துடன் தற்போது கனடாவையும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்கப்படும் என்று தெரிவித்து இருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பையும், என்ன நடக்கும் என்று ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் ராணுவ அதிகாரம்:
அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு பனாமா மற்றும் கிரீன்லாந்து இரண்டும் ஏன் முக்கியம் என்பதை டிரம்ப் வலியுறுத்தி வந்துள்ளார். தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசம் அல்லது பனாமா கால்வாயை கையகப்படுத்த ராணுவ அல்லது பொருளாதார சக்தியை பயன்படுத்தவும் தவற மாட்டேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதையேதான் கனடாவுக்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவுடன் மோதலுக்கு தயாரான டிரம்ப்:
சமீபத்தில் செய்தியாளர்களை புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது, பொருளாதார பாதுகாப்புக்காக பானாமா மற்றும் கிரீன்லென்ட் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது என்று தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு பனாமா கால்வாய் மற்றும் டென்மார்க் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனடாவுக்கு பொருட்கள் மற்றும் ராணுவ ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், செயற்கையாக இருநாடுகளுக்கும் இடையே எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவுடன் சேர்க்கப்படுமா கனடா?
அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்க்கப்படும் வரை கனடாவின் மீது பொருளாதார அழுத்தம் கொடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். கனடா நம்மிடம் இருந்து எந்தக் காரையும் எடுத்துச் செல்ல முடியாது, விவசாய நிலத்தையும் எடுத்துச் செல்ல முடியாது. அடிப்படையில் நாம்தான் கனடாவை பாதுகாத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கனடாவை பாதுகாப்பதற்காக அமெரிக்க பல பில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறது. இதனால் எங்களுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. நாம் பயன்படுத்தும் கார்களில் 20% கனடாவின் தயாரிப்பு. எனக்கு அவர்களது கார் வேண்டாம். அதை நானே டெட்ராய்ட் நகரில் தயாரிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.
கல்ப் ஆப் அமெரிக்காவாக மாறுகிறதா மெக்சிகோ?
மறுபக்கம் மெக்சிகோவையும் டொனால்ட் டிரம்ப் சாடினார். மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் வருகிறது என்பது அவரது கடுமையான குற்றச்சாட்டாக இருக்கிறது. எதிர்காலத்தில் இதை மாற்றுவோம். மெக்சிகோவால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. வர்த்தக பற்றாக்குறைதான் ஏற்படுகிறது. நாங்கள் மெக்சிகோவை கல்ப் ஆப் அமெரிக்கா என்று மாற்றுவோம்.
அமெரிக்காவுக்குள் புலம் பெயர்பவர்களை கனடா நிறுத்தாவிட்டால், போதைப்பொருட்கள் கடத்துவதை மெக்சிகோ நிறுத்தாவிட்டால் இந்த இருநாடுகளின் மீதும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா - கனடா வர்த்தக உறவு:
கனடா தனது பல்வேறு சிக்கல்களை கடந்து வளர்ந்து இப்போது ஒரு வர்த்தக நாடாக உள்ளது. உலக மக்கள்தொகையில் 0.5% மட்டுமே இருந்தபோதிலும், கனடா உலக வர்த்தகத்தில் 2.2% ஐக் கொண்டுள்ளது. பொருட்களின் ஏற்றுமதி ஆறு கனடா மக்களில் ஒருவர் வேலையை ஆதரிக்கிறது. அந்தளவிற்கு அங்கு தொழிலாளர்களின் முக்கியத்துவம் இருக்கிறது.
கனடா உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61% ஐ உள்ளடக்கிய மொத்தம் 15 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. தி கன்வர்சேஷன் அறிக்கையின்படி, கனடா நிறுவனங்கள் ஒவ்வொன்றும் உலகளவில் 1.5 பில்லியன் நுகர்வோரை அணுக உதவுகிறது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய நாடாக கனடா இருப்பதால், அந்த நாட்டுடன் பெரிய அளவில் வர்த்தக உறவை வாஷிங்டன் வைத்துக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் ஒரே மாதிரியான கலாச்சார விதிமுறைகள், சட்ட அமைப்புகள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் பாலங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஐரோப்பா, கனடா உறவு:
ஐரோப்பா நாடுகளுடன் கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, கனடாவின் நிறுவனங்களை அணுகுவதை விட கனடா சந்தையை எளிதில் அடையலாம் என்று ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன. ஆனால், கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஆண்டுதோறும் சுமார் 900 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடக்கிறது. கனடா மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறி இருப்பது, கனடாவின் எரிவாயு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
பனாமா கால்வாய்:
வடக்கு, தெற்கு அமெரிக்காவை இணைப்பது தான் பனாமா கால்வாய். இது வரலாற்றில் காலம் காலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. சுமார் 82 கி. மீட்டர் நீளம் கொண்டது. ஆனால், மிகக் குறுகிய அகலம் கொண்டது. ஆனால், இந்தக் கால்வாய் இன்றளவும் அமெரிக்க சிவில் இஞ்சினியர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. உலகின் ஏழு உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று பாராட்டி வருகின்றனர். கொலம்பியாவின் பிடியில் இருந்து விடுபட்டு பானாமா சுந்தந்திரமாக இயங்குவதற்கு உதவியதே அமெரிக்காதான். இங்கு அமெரிக்காவின் தந்திரமும் அவர்களுக்கு கை கொடுத்தது. இந்தக் கால்வாய் 1914ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது மனித தொழில்நுட்பத்தின் புரட்சி என்று கூட அந்தக்கால கட்டத்தில் இந்தக் கால்வாயை கூறலாம்.
அமெரிக்காவுக்கு பனாமா கால்வாய் ஏன் முக்கியம்?
அமெரிக்காவுக்கும், பனாமாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பனாமா மக்களிடையே பல ஆண்டுகளாக எதிர்ப்பை கிளப்பி வருகிறது. இந்த ஒப்பந்ததத்திற்குப் பின்னர் இந்தக் கால்வாயின் கட்டுப்பாடு அமெரிக்காவின் பக்கம் சென்றது. பனாமா கால்வாயை அமெரிக்காதான் தற்போது 75% பயன்படுத்தி வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
பனாமா நாடு இந்தக் கால்வாயின் மூலம் 2020 ஆம் ஆண்டில் 3.4 பில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் ஈட்டி இருந்தது. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% லாபமாகும். பனாமாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அதாவது ஜிடிபிக்கு பனாமா கால்வாய் 2.7% வருமானம் ஈட்டி கொடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் மொத்தம் இந்தக் கால்வாயின் வாயிலாக 13,369 போக்குவரத்து நடந்துள்ளது. இது இதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டில் 3% குறைந்து இருந்தது. அப்போது பரவி இருந்த கொரோனாவும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.
பனாமா கால்வாய் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. 2023ல் இந்தக் கால்வாய் வற்றிவிட்டது. வறட்சியின் காரணமாக இந்த சூழல் உருவானது. எப்போது எல்லாம் பனாமா கால்வாயில் குறைந்த தண்ணீர் இருக்கிறதோ அப்போது எல்லாம் கப்பல் போக்குவரத்தும் குறைக்கப்படும்.
ஆனால், அவரது குற்றச்சாட்டே சீனா மீதுதான். இங்கும் மூக்கை நுழைக்கும் சீனாவை எப்படி ஓரம் கட்டுவது என்பது இவருக்கு சவாலாக எழுந்துள்ளது. பனாமா கால்வாயை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சீனா தனது ராணுவ வீரர்களை அனுப்புகிறது என்று டிரம்ப் கடந்த மாதம் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று பனாமா கூறுகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலை பனாமா கால்வாய் இணைப்பதால் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் கப்பல்களுக்கு மட்டும் அதிக கட்டணத்தை பனாமா விதிக்கிறது என்றும் டிரம்ப் கூறி இருந்தார்.
மேலும் தான் பதவியேற்பதற்கு முன்னதாக உடனடியாக கட்டணத்தை அமெரிக்காவுக்கு குறைக்க வேண்டும், இல்லை என்றால் பனாமா கால்வாயின் முழுபொறுப்பையும் வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்து இருந்தார்.
பனாமா கால்வாய் அமெரிக்க வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய பாதையாகும். அமெரிக்க கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 14% இதன் வழியாகவே செல்கிறது. எண்ணெய், எரிபொருள்கள், தாதுக்கள், உலோகங்கள், தானியங்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்தக் கால்வாயின் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது.
யார் கட்டியது பனாமா கால்வாய்?
பிரான்ஸ் இந்தக் கால்வாயை கட்டுவதற்கு முயற்சி செய்தது. ஆனால், அந்த நாட்டினால் முடியவில்லை. அமெரிக்கா உடனடியாக களத்தில் இறங்கி 1904-1914 ஆம் ஆண்டுக்குள் பனாமா கால்வாயை கட்டி முடித்தது. இதற்குப் பின்னர் பல ஆண்டுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில், மேற்பார்வையில் தான் பனாமா கால்வாய் இருந்தது. அமெரிக்காதான் பனாமாவையும் உருவாக்கியது. இதற்கு முன்னதாக கொலம்பியாவின் கட்டுபாட்டில் பனாமா இருந்தது.
கொலம்பியாவை அடக்கிய அமெரிக்க ராணுவம்:
அமெரிக்காவின் பனாமா கால்வாய் ஒப்பந்தத்தை கொலம்பியா எதிர்த்தது. இதனால் கிளர்ச்சி ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் கொலம்பியாவுடன் மோதினர். வடக்கு கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் பனாமாவுடன் இணைந்தனர். அமெரிக்க ராணுவம் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக கொலம்பியா ராணுவத்தை அடக்கியது. இதற்குப் பின்னர் பனாமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்க கொண்டு வந்தது. 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிராக பனாமாவில் எதிர்ப்பு கிளம்பியது.
கார்டர்- டோர்ரிஜோ ஒப்பந்தம்:
1977ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டர் மற்றும் பனாமா தலைவர் ஒமர் இப்ரையின் டோர்ரிஜோ இருவருக்கும் இடையே பனாமா கால்வாய் தொடர்பான ஒப்பந்தம் கார்டர்- டோர்ரிஜோ ஒப்பந்தம் என்ற பெயரில் கையெழுத்தானது. 1999ஆம் ஆண்டு இந்தக் கால்வாயை தங்களது கட்டுப்பாட்டில் பனாமா கொண்டு வந்தது. அதுவரை 'பனாமா கால்வாய் ஆணையம்' கவனித்து வந்தது.
தற்போது மீண்டும் பனாமா கால்வாய் முக்கிய விஷயமாக வெடித்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் பனாமா அதிபர் ஜோஸ்ரவுல் முலினோ, ''ஒவ்வொரு சதுர அடியும் பனாமாவுக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆட்டம் இருக்கிறதா?
பனாமா கால்வாயை எந்த வகையிலும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்று பகிரங்கமாக பனாமா அதிபரே விளக்கம் அளித்து இருக்கிறார். உலகில் யார் வேண்டுமானாலும் பனாமா கால்வாய்க்கு வரலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சீனா தனது கப்பல்களை உளவு வேலைக்கு பயனபடுத்தி வருவதாக வாஷிங்டன் திங் டேங் சிகே ஹட்சிசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவரது பார்வை அண்டை நாடுகளின் மீது இருக்குமா? அல்லது ஆசிய நாடுகளின் மீது இருக்குமா? என்று பார்க்கலாம்.