The Godawan whisky: 2024 லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியில் இந்திய விஸ்கி பிராண்ட் 'உலகின் சிறந்த சிங்கிள் மால்ட்' விருதை வென்றுள்ளது. ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட கோடவன் 100 என்ற கலெக்டர்-எடிஷன் சிங்கிள் மால்ட் விஸ்கி, 80 நாடுகளைச் சேர்ந்த பிராண்டுகளை தோற்கடித்து இந்த விருதை வென்றுள்ளது.
2024 லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியில் (LSC) 'உலகின் சிறந்த சிங்கிள் மால்ட் ' விருதை இந்திய விஸ்கி பிராண்ட் ஒன்று வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் வருடாந்திர உலகளாவிய நிகழ்வு, தரம், மதிப்பு மற்றும் பேக்கேஜிங் ஆகிய மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் மதுபானங்களை மதிப்பிடுகிறது.
இந்த ஆண்டு லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியில் நிபுணத்துவ நீதிபதிகள் குழு, ஆஸ்திரேலியா, இத்தாலி , அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ் உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த பிராண்டுகளை ஆராய்ந்து இந்திய சிங்கிள் மால்ட்டை வெற்றியாளராக அறிவித்தது.
சிறந்த விஸ்கி விருது பெற்றுள்ள கோடவன் 100 ஒரு கலெக்டர்-எடிஷன் சிங்கள் மால்ட் ஆகும். இது ராஜஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தரமான சிங்கள் மால்ட் விஸ்கி இதுவாகும். 100 பாட்டில்கள் மட்டுமே கிடைக்கும், இந்த விஸ்கி மிகவும் அதிக மதிப்பு பெற்றுள்ளது.
ராஜஸ்தானின் அல்வாரில் கிடைக்கும் பார்லியில் இருந்து காய்ச்சப்படும் இந்த விஸ்கி 37°Cக்கும் அதிகமான வெப்பநிலையில் பக்குவப்படுத்தப்பட்டு, பீப்பாய்களில் அடைக்கப்படுகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் உள்ள இந்தியப் பறவையினமான கானமயிலைப் பெருமைப்படுத்தும் வகையில் கோடவன் 100 என்ற பெயர் வைக்கப்பட்டது.
கேரமல், இலவங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள கோடவன் 100 ஆடம்பரமான விஸ்கியாகவும் பெயர் பெற்றுள்ளது. கலெக்டர்ஸ் எடிஷன் விஸ்கியாக இருப்பதால், கோடவன் 100 இன் துல்லியமான விலை வெளியிடப்படவில்லை. ஆனால், இதன் வேரியண்ட்களான கோடவன் சிங்கிள் மால்ட் ரிச், ரவுண்டட் ஆர்ட்டிசன் விஸ்கி, கோடவன் சிங்கிள் மால்ட் ஃப்ரூட்ஸ், ஸ்பைஸ் ஆர்ட்டிசன் விஸ்கி ஆகியவற்றின் விலை ரூ.4,100 ஆக உள்ளது.
லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பிராண்ட் கோடவன் மட்டும் அல்ல. தங்கப் பதக்கம் வென்ற விஸ்கி 'நிர்வாணா', 'பால் ஜான் XO பிராந்தி', 'ரவுலட் லண்டன் ட்ரை ஜின்' ஆகியவை வெள்ளி வென்றுள்ளன. இதன் மூலம் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் (விஸ்கி, ஜின் மற்றும் பிராந்தி) விருது பெற்ற ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை ஜான் டிஸ்டில்லரீஸ் லிமிடெட் (ஜேடிஎல்) பெற்றுள்ளது.