தற்போது உள்ள இந்த வைரஸ் தொற்று ஒரே நாளில் திடீரென மாயமாகி விடாது, எனவே உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும், பல நாடுகள் கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை அப்பட்டமாக புறக்கணித்து வருகின்றன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டுமென உலகச் சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இருவர் மாற்றி ஒருவர் சண்டையிடுவதற்கு பதிலாக உண்மையான நிலவரத்தை புரிந்து கொண்டு நோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் எனவும் அது கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் தான் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் வைரசின் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும், இரண்டாவது அலை எப்போது ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை11,204, 873 ஆக உயர்ந்துள்ளது. இதுவரைக்கும் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,380 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 62, 92, 523 ஆக உள்ளது. உலக அளவிலான பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் வல்லரசு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், நான்காவது இடத்தில் இந்தியாவுக்கு இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது, இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவ்வமைப்பின் அவசர இயக்குனர் மைக் ரியான், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும், வைரஸ் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் கள உண்மை நிலவரங்களை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். புள்ளிவிவரங்கள் கொடுக்கும் உண்மையை பல நாடுகள் புறக்கணித்து வருகின்றன. பொருளாதார காரணங்களால் வணிக நடவடிக்கைகளை தொடர வேண்டிய அவசியம் இருக்கலாம், ஆனால் பிரச்சினையை புறக்கணிக்க முடியாது.
தற்போது உள்ள இந்த வைரஸ் தொற்று ஒரே நாளில் திடீரென மாயமாகி விடாது, எனவே உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும், பல நாடுகள் கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை அப்பட்டமாக புறக்கணித்து வருகின்றன. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும், உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எந்த நேரத்திலும் தாமதிக்கவில்லை என ரியான் கூறியுள்ளார். ஊரடங்கு பொறுத்தவரையில் முழு நாட்டையும் பூட்டி சீல் வைப்பதைவிட, ஓரளவுக்கு பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், வைரஸ் வேகமாக பரவும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தி அதனால் கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் போகும் பட்சத்தில் அது அந்நாட்டில் மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் அந்நாட்டின் சுகாதார அமைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், அதிக மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில் இந்த நாடுகள் விதிகளை மீண்டும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், வைரஸ் தொற்று பரவலை தடுப்பதை தவிர வேறு வழி இல்லை, அப்படி இல்லையென்றால் வைரசை தடுப்பதற்கு ஏதாவது வேறு வழி இருக்கிறதா என கேள்வி எழுப்பிய அவர், இல்லை என்றால் முழு அடைப்பை தவிர வேறு வழியே இல்லை எனக் கூறினார்.