உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது, இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் மக்கள் இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க ஒரு கோடியை கடந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் தீவிரம் காட்டிவந்த கொரோனா தற்போது ஆசிய கண்டத்தில் தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. அதில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது, மேலும் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,087 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாடு முழுதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரேநாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை அங்கு 4,551 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்தி 13 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 941பேருக்கும், ஒட்டு மொத்தமாக 13 லட்சத்து 50 ஆயிரத்து 773 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது, இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்று உறுதியானது தெரிந்தவுடன் தன்னைத்தானே தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், அதேநேரத்தில் இறைவனின் அருளால் எனது உடல்நலம் அதைத் தாங்கும் வகையில் உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டபடியே அரசு வேலைகளை கவனிப்பேன், எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சையது அமினுல், முன்னாள் பிரதமர்கள் யூசுப் கிலானி, ஷாகித் அப்பாசி ஷாப்பல் ஷெரிப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.