
உலகில் எங்கு தீவிரவாத செயல்கள் நடந்தாலும், அதைச்சுற்றி பாகிஸ்தானின் காலடி சுவடு இருக்கும். ஆதலால், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக நாம் அடையாளப் படுத்த வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தினார்.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச முனையம், மற்றும் உலக வங்கிக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழு பங்கேற்று வருகிறது. அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நம்பிக்கைஇல்லை
தீவிரவாதத்தோடு தொடர்புடைய விஷயங்களை பாகிஸ்தான் கையாளுவதில் பாகிஸ்தான் மீது மிகக் குறைந்த நம்பகத் தன்மையே இருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த 19-வது சார்க் மாநாட்டில் ஏறக்குறைய இந்தியாவுடன் சேர்த்து 5 நாடுகள் வெளியேறிவிட்டன. இதனால், அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
தடம்
தீவிரவாதத்தை கொள்கையாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதால், ஒவ்வொரு தீவிரவாத செயலுக்கும், உலகளவில் எங்கு தீவிரவாத செயல்கள் நடந்தாலும், அதைச்சுற்றி பாகிஸ்தானின் தடம் இருக்கும். சர்வதேச தீவிரவாதத்தோடு பாகிஸ்தான் தன்னை அடையாளப் படுத்துகிறது.
தீவிரவாதத்தால் தானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், அந்த நாட்டின் குரலை உலகம் கேட்கத் தயாராக இல்லை. தீவிரவாதம் தொடர்பான விஷயங்களை அந்நாடு கையாள்வதில் நம்பகத்தன்மை கிடையாது.
மிரட்டல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை நாங்கள் மிகைப்படுத்தியதாக நினைக்கவில்லை. இருநாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்த போதிலும், அதில் பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதத்தை பிரயோகப் படுத்துவோம் என மிரட்டல் விடுத்து வருகிறது. இப்படி மிரட்டுவது எப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு கிடையாது.
முன்னுரிமை
பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதன் தாக்கம், அந்த செய்தியை அறிவித்த சில நிமிடங்களில், இந்தியாவின் ‘கரன்சி’ சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்துக்கு எப்போதும் அதிக முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், தேசிய பாதுகாப்பும், இறையான்மையும் எங்களைப் பொருத்தவரை தலையாய விஷயமாகும்.
ராணுவத் தாக்குதல் நடத்தியது குறித்து எங்கள் நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து விளக்கம் அளித்து, கருத்து ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் என்பது ராணுவத்தின் புத்திசாலித்தனம், தீவிரவாத செயலை முன்கூட்டியே முறியடித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.