பாகிஸ்தான் அணு ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறது? இந்தியாவின் பலம் என்ன?

Published : May 01, 2025, 11:32 AM IST
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறது? இந்தியாவின் பலம் என்ன?

சுருக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில், அவற்றின் அளவு மற்றும் பலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருவதால், பாகிஸ்தான் அச்சத்தில் உள்ளது.

Nuclear weapons India - Pakistan: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. இரண்டு நாடுகளும் தங்களது வான்வழிகளை மூடியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஓய்வு 
காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே சிறிய மோதல் இருந்து வருகிறது. இந்திய ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். எந்த நேரத்திலும் பாகிஸ்தானை இந்தியா தாக்கலாம் என்று இஸ்லாமாபாத் கருதி வருகிறது. அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலர் பணியில் இருந்து ஓய்வுக்கு செல்வதாக தகவல் வெளியாகி வருகிறது.

பாகிஸ்தானிடம் அணுஆயுதங்கள் 
இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியாக எந்தளவிற்கு வலுவாக இருக்கின்றனர் என்று பார்க்கலாம். இருதரப்பிலும் அணுஆயுத ஏவுகணைகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கையில், பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் குறித்த பல விவரங்கள் வெளியாகி இருந்தது. பாகிஸ்தான் தன்வசம் மறைத்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை இந்த அறிக்கை அப்பட்டமாக வெளிக்காட்டியது. 

இந்தியா - பாகிஸ்தான் அணுசக்தி பலம் என்ன? 
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 14 முதல் 27 கூடுதல் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கில் 170 போர் தொடர்பான அணுஆயுத ஏவுகணைகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும், சுமார் 180 அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட முடியாது என்று கூறப்பட்டது. 

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் எங்கே பதுக்கப்பட்டுள்ளது? 
அணு ஆயுதங்களை இயக்குவதற்கு பாகிஸ்தான் மிராஜ் III மற்றும் மிராஜ் V போன்ற போர் விமானங்களை நம்பி இருக்கிறது என்று அமெரிக்கா வெளியிட்டு இருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானங்கள் இரண்டு விமான தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ஆர்கோ காரிசன் (இந்திய எல்லையிலிருந்து 145 கி.மீ), குஜ்ரன்வாலா காரிசன், குஷ்தார் காரிசன் (இந்திய எல்லையிலிருந்து வெகு தொலைவில்), பனோ அகில் காரிசன் (எல்லையிலிருந்து 85 கி.மீ) மற்றும் சர்கோதா காரிசன், கராச்சிக்கு மேற்கே உள்ள மஸ்ரூர் விமானப்படை தளம் மற்றும் பனோ அகில் ராணுவ காரிசன் ஆகிய இடங்களில் பதுக்கி வைத்திருக்காலம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்தியாவின் அணுசக்தி பயணம் எப்போது?
இந்தியாவின் அணுசக்தி பயணம் 1974 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டில் தான் உலக அரங்கமே அதிரும் வகையில் அணுசக்தி சோதனையை நடத்தியது. உலகின் அணுசக்தி திறனை நிரூபிக்கும் ஆறாவது நாடாக உருவெடுத்தது. இதற்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் 1998 இல் இந்தியாவுக்கு பதிலளிக்கும் விதமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. இது இருநாடுகளையும் தாங்கள் யார் வலுவானவர்கள்  என்பதை காட்டிக் கொள்வதற்கான தொடக்கமாக அமைந்தது.

இந்தியாவின் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை
ஆனால் புதுடெல்லி அணுசக்தி நவீனமயமாக்கலில் இறங்கியுள்ளது. அதன் தொடக்கமாக குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை  வெற்றிகரமாக நடத்தப்பட்டது. MIRV தொழில்நுட்பத்தில் உருவான இந்த அக்னி - 5 ஏவுகணை பல இலக்குகளைத் தாக்க உதவுகிறது. இந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவைப் பார்த்து தற்போது பாகிஸ்தானும் MIRV திறன்களை வளர்க்க முயற்சித்து வருகிறது. 

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உயர்வு 
இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட், 2025–26 ஆம் ஆண்டில் 79 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 10% அதிகமாகும். இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தானின் பட்ஜெட் வெறும் 8 பில்லியன் டாலர்தான். இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தானை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக ராணுவத்திற்காக இந்தியா செலவிடுகிறது.

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள்
ரஃபேல் போர் விமானங்கள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதன் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் பெருமளவிலான நவீனமயமாக்கல் மூலம் இந்தியா தனது ஆயுதங்களை விரிவுபடுத்தியுள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?