ஒருமித்த குரலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 மேற்கத்திய நாடுகள்

By SG Balan  |  First Published Oct 10, 2023, 8:21 AM IST

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேல் அரசுக்கு உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த தாக்குதல்களில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் தாக்கினால் தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளைக் கொல்லப்போவதாகவும் ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

Latest Videos

undefined

ஆனால், இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று உறுதியாகக் கூறிவருகிறது. போர் நடப்பதை இஸ்ரேல் விரும்பாவிட்டாலும் ஹமாஸ் திணித்துவிட்டதாகவும் போரின் நீண்டகால பின்விளைவுகளை எதிரிகள் உணர்வார்கள் என்றும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளார். இந்நிலையில், ஐந்து மேற்கத்திய நாடுகளின் ஒருமித்த ஆதரவு இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள், ஹமாஸ் மற்றும் அதன் கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயல்களுக்கு அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இஸ்ரேல் அரசுக்கு எங்கள் உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கிறோம். ஹமாஸ் மற்றும் அதன் பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் தெளிவான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்" என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை இல்லை என்றும், அவர்களின் பயங்கரவாத செயல்கள் உலக அளவில் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

"சமீப நாட்களில், ஹமாஸ் பயங்கரவாதிகள் வீடுகளில் புகுந்து குடும்பம் குடும்பமாகக் கொன்று குவித்ததையும், இசை விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றிருந்த 200 இளைஞர்களைக் கொன்று குவித்ததையும், இப்போது வயதான பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களை கடத்தி பிணைக்கைதிகளாகப் வைத்துள்ளதையும் உலகம் திகிலுடன் பார்த்துவருகிறது" என அறிக்கையில் கூறப்படுகிறது.

“இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராகத் தன்னையும் அதன் மக்களையும் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் முயற்சிகளுக்கு நமது நாடுகள் ஆதரவளிக்கும். இஸ்ரேலுக்கு விரோதமான எந்தவொரு தரப்பும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்வது சரியல்ல என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் அனைவரும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான அபிலாஷைகளை அங்கீகரிக்கிறோம். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் தேவை என்பதை ஆதரிக்கிறோம். ஆனால் ஹமாஸ் அந்த அபிலாஷைகளை வெளிப்படுத்தவில்லை" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வரவிருக்கும் நாட்களில், அமைதி திரும்ப இஸ்ரேலின் நட்பு நாடுகளாக ஒற்றுமையாகவும் ஒருங்கிணைந்தும் செயல்படுவதாக தலைவர்கள் அறிக்கையில் உறுதி அளித்துள்ளனர்.

காசா பகுதியை தன்வசம் வைத்துள்ள ஹமாஸ், அதன் இஸ்ரேலுக்கு உட்பட்ட காசாவின் தெற்குப் பகுதிகளில், கடந்த சனிக்கிழமை காலை முதல் பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது. 50 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, காசா எல்லை நகரங்கள் அனைத்தையும் மீண்டும் கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. 2007ஆம் ஆண்டு பாலஸ்தீனப் படைகளிடம் இருந்து ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து காஸா மீது இஸ்ரேல் பல்வேறு கட்டத் தடைகளை விதித்துள்ளது.

click me!