பெரும்பான்மை பெறமுடியாமல் இம்ரான் கான் ஆட்சியை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்:
பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை துணை சபா நாயகர் சுரி ரத்து செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து பிரதமர் கானின் பரிந்துரையை ஏற்று, பாகிஸ்தான் அதிபர் நாடாளுமன்ற அமைச்சரவை கலைத்து அதிரடி காட்டினார். மேலும் 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
undefined
உச்சநீதிமன்றம் உத்தரவு:
இதனையடுத்து இம்ரான் கான், முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை காபந்து பிரதமராக நியமித்தார். இதனையை கடுமையாக கண்டித்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நம்பிக்கை தீர்மானம் ரத்து செல்லாது என்று உத்தரவிடக்கோரி ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது, நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று உத்தரவிட்டது.
நள்ளிரவு வாக்கெடுப்பு:
மேலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சனிக்கிழமை தாக்கல் செய்து வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடிய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்ரான் கான் ஆட்சி கலைப்பு:
தொடர்ந்து சபாநாயகர் ஆசாத் குவைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் எதிரான வாக்களித்தனர். இதனால் பெருப்பான்மை இழந்ததால் இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளாகியுள்ளார் இம்ரான் கான்.
அடுத்த பிரதமர் யார்..?
இதுக்குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப், நாடும் நாட்டு மக்களும் கடுமையான நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. புதிய விடியலுக்கான பாகிஸ்தான் தேசத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமையவுள்ள புதிய அரசு, முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என்று குறிப்பிட்டுள்ளார். யாருக்கும் அநிதி இழைக்கவோ சிறையில் அடைக்கவோ போவதில்லை என்று பதிவிட்டுள்ள அவர் சட்டம் அதன் வழியில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகள் பிஎம்எல்-என் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.