பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
பாகிஸ்தான் - நம்பிக்கையில்லா தீர்மானம் :
பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
நேற்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார். இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்ரான்கான் - தோல்வி :
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.