கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் சரிந்த பொருளாதாரம் :
இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனையும் மீறி மக்கள் போராட்டங்கள் தொடர்ந்துள்ளன. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது.
போராட்டத்தில் குதித்த இலங்கை மக்கள் :
சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். பொருளாதார நெருக்கடியை சமாளித்த இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.
ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மக்கள் தினமும் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.இலங்கையில் நெருக்கடி நிலை அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களை போராட்டத்தில் ஈடுபட தள்ளியுள்ளது. இதனால் வரும் நாட்களில் போராட்டங்கள் மேலும் வலுவடையும் சூழல் உருவாகி இருக்கிறது.
நிதி அமைச்சர் அலி சப்ரி :
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி, ‘இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர் கடன் வரம்பை இலங்கை கோருகிறது. இது ஐந்து வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். இந்த உதவியை எங்களுக்கு செய்ய வேண்டும் என கோருகிறோம்.
எங்களுக்கு வேறு வழியில்லை. இதுமட்டுமின்றி ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம். நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியும். போராட்டத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது.
இந்தியா உதவ வேண்டும் :
சீனாவிடம் 1.5 பில்லியன் டாலர் கடன், 1 பில்லியன் டாலர் வரையிலான ஒருங்கிணைந்த கடன் மற்றும் ஏற்கெனவே பெற்ற சில கடனை மறுசீரமைக்க பேசி வருகிறோம். ஜனவரி மாதம் முதலே இதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்களால் சில உதவிகளை பெற முடியும் என்று நம்புகிறோம்.
இந்த உதவி கிடைத்தால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை மீட்க உதவும். இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள் சுமார் மூன்று பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. நாங்கள் ஒரு நடுநிலை நாடு. நாங்கள் அனைவருக்கும் நண்பர்களாக இருக்கிறோம். பெரும் பாதிப்பை சந்தித்து வரும் இந்த நேரத்தில் நல்லெண்ண உறவுகள் கொடுக்கும் என திடமாக நம்புகிறோம்.