உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்யாவை பல நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புடின் - ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக பீஜிங் சென்றடைந்தார். ரஷ்யா - சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டிலும் புடின் பங்கேற்கிறார்.
சீனா இந்த வாரம் 130 நாடுகளின் பிரதிநிதிகளை தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு வரவேற்று அழைப்பு விடுத்தது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்யாவை பல நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புடின் - ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கம்யூனிச நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் ஏற்கனவே வலுவான உறவைப் பேணிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு அவர்களது உறவை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. சீனப் பயணத்தின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளிக்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு அமையும் என்று கருதுகிறார்கள்.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் காசாவின் பலத்த பாதுகாப்பை உடைத்து ஊடுருவியது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் 1,400 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே மூண்ட போர் ஒரு வாரத்தைத் தாண்டி நீடிக்கிறது.
ஹமாஸ் பிடியில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசி பதிலடி தாக்குதல் நடத்தியது. அங்கு வசித்துவந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் சுமார் 2,750 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
இதனிடையே, இஸ்ரேல்-காசா மோதல் குறித்த சீனாவின் அறிக்கைகளில் ஹமாஸ் பெயரை குறிப்பிடாததற்காக சீனாவை மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் பேசியுள்ளார். அப்போது சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிளிங்கன் வலியுறுத்தினார்.
சீனா ஈரானுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அங்குள்ள அரசு ஹமாஸ் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கிறது. இந்நிலையில், திங்கள் இரவில் லெபனானின் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஒரு செய்தியாளர், 2 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் வலுவடையும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுடன் லெபனானும் இருமுறை போரைத் தொடங்க வழிவகுக்கலாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் 199 பணயக் கைதிகளாக உள்ளனர்: இஸ்ரேல் ராணுவம் தகவல்