இத்தாலிய - சுவிஸ் எல்லை.. வருடத்தில் 3 மாதம் இருளில் மூழ்கும் சிறு கிராமம் - மாஸ் தீர்வு கண்ட மேயர்! என்ன அது?

By Ansgar RFirst Published Apr 15, 2024, 2:04 PM IST
Highlights

Viganella : இத்தாலி-சுவிஸ் எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான விகனெல்லா, ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொள்கிறது.

சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை மூன்று மாதங்கள் இருளில் தான் மூழ்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இது சிறு கிராமம் பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதால் சூரிய ஒளியின் பற்றாக்குறை, நாளடைவில் இங்கு மக்கள்தொகை குறைவதற்கு வழிவகுத்துள்ளது. (2016ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வெறும் 169 பேர் தான் அங்கு வசித்து வருகின்றனர்)

பல குடியிருப்பாளர்கள் வெயிலின் தட்பவெப்பநிலையை நாடி, காலப்போக்கில் வேறு நகரங்களுக்கு குடிபெயர துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1999 ஆம் ஆண்டில், இந்தப் போக்கை மாற்றியமைக்கும் முயற்சியில், அப்போதைய மேயர் பிராங்கோ மிடாலி ஒரு தைரியமான தீர்வை முன்மொழிந்தார். சூரிய ஒளியை அந்த கிராமத்திற்குள் பிரதிபலிக்கும் ஒரு மாபெரும் கண்ணாடியை நிறுவும் முடிவு தான் அது.

Strange Ritual : உள்ளாடையை கழட்டி முள்வேலியில் தொங்கவிடும் பெண்கள்.. வினோத சடங்கு - எதற்காக தெரியுமா?

கட்டிடக் கலைஞர் ஜியாகோமோ பொன்சானி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார் மற்றும் பொறியாளர் கியானி ஃபெராரியின் உதவியுடன் எட்டு மீட்டர் அகலம், ஐந்து மீட்டர் உயரம் கொண்ட கண்ணாடியை வடிவமைத்தார்கள். 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கண்ணாடியானது, சூரிய ஒளியை ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பிரதிபலிக்கும் வகையில் சூரியனின் பாதையை கண்காணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது.

நேரடி சூரிய ஒளியைப் போல வலுவாக இல்லாவிட்டாலும், பிரதிபலித்த ஒளி அந்த இடத்தை வெப்பமாக்குகிறது மற்றும் வீடுகளுக்கு மிகவும் தேவையான இயற்கை ஒளியை வழங்குகிறது. மேலும் இந்த கண்ணாடி குளிர்கால மாதங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றபடி ஆண்டு முழுவதும் அது மூடப்பட்டிருக்கும்.

இத்திட்டம் நடைமுறைப் பலன்களைத் தந்தது மட்டுமின்றி சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. மல்டிமீடியா கலைஞரான சில்வியா கம்போரேசி 2020 இல் விகனெல்லாவுக்குச் சென்று அந்த கண்ணாடியை குறித்த ஒரு  ஆவணத்தை தயார் செய்தார். விகனெல்லாவின் இந்த வெற்றிக் கதை மற்ற இடங்களிலும் இதே போன்ற திட்டங்களை தொடங்க ஊக்குவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில், தென்-மத்திய நோர்வேயில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ர்ஜுகானில் இதேபோன்ற கண்ணாடி நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓமான் கனமழை வெள்ளம்: கேரளாவை சேர்ந்த 12 பேர் பலி!

click me!