ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் 13 இடங்களில் 36 ஹவுதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கா, பிரிட்டன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தி உலக வர்த்தகத்தை சீர்குலைத்துவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 28 அன்று ஜோர்டானில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து ஏமனில் கூட்டாக வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
"செங்கடலைக் கடக்கும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் 13 இடங்களில் 36 ஹவுதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது" என அமெரிக்கா, பிரிட்டன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த துல்லியமான தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகத்தையும், அப்பாவி கடற்படையினரின் உயிரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் ஹவுதிகளின் ஆற்றலைச் சீர்குலைக்கும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹவுதிகளின் ஆயுத சேமிப்புக் கிடங்குகள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களைக் குறிவைத்து தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ன்னதாக சனிக்கிழமையன்று ஹவுதிகளின் 6 ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி வீழ்த்தியுள்ளது. செங்கடலில் பயணிகும் கப்பல்களுக்கு எதிராக தாக்கல் நடத்த ஆயத்தமாக இருந்ததால் அவை அழிக்கப்பட்டன எனவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
முந்தைய தினம் ஏமன் அருகே சுற்றித் திரிந்த எட்டு ட்ரோன்களையும் அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தின. மேலும் ட்ரோன்களை விண்ணில் ஏவுவதற்கு முன்பு தரையிலேயே தாக்கி அழித்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. தரையிலேயே தாக்கி அழிக்கப்பட்ட நான்கு ட்ரோன்களும் ஹவுதிகளுக்குச் சொந்தமானவை என்றும் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டவை யாருடையவை என்று அடையாளம் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் நாசமடைந்துள்ள காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேஸ் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். பின், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.