
உக்ரைனை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இப்போது இந்தியாவுடனான உறவுகளின் வேர்களை தோண்டி எடுக்கிறார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை அவர் ஆதரித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளார். இதனால், இந்தியா மீதான மொத்த அமெரிக்க வரி 50 சதவீதமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவுடனான உக்ரைனின் உறவுகளை ஜெலென்ஸ்கியின் அலட்சியப்படுத்தி உள்ளார். ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் நிலைப்பாடு காரணமாக பாகிஸ்தானுடனான உக்ரைனின் பாதுகாப்பு உறவுகள் வலுப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சில நாட்களில் ஜெலென்ஸ்கியின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நட்பு பாராட்டினார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான இடத்திற்கு ஒன்றாக பயணித்தபோது மோடியும், புதினும் 45 நிமிட கலந்துரையாடலை நடத்தினர். எரிசக்தி, சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தகவல்படி, போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிற்கு 985 பில்லியன் டாலர் வருவாயை வழங்கிய ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் அடங்கும்.
இந்தியா-உக்ரைன் உறவுகள் நீண்ட காலமாக பதட்டமாக உள்ளன. 1998 அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஐ.நா. தடைகளுக்கு ஆதரவாக உக்ரைன் வாக்களித்தது. இது மட்டுமல்லாமல், ஜெலென்ஸ்கி ஆட்சி காலத்தில், 2019 -ல் இந்தியா 370 வது பிரிவை ரத்து செய்ய முடிவு செய்த பின்னர், காஷ்மீரில் சர்வதேச தலையீட்டை உக்ரைன் ஆதரித்தது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைக்கு மத்தியில் 1991 முதல் 2020 வரை, உக்ரைன் பாகிஸ்தானுக்கு சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்றுள்ளது. இவற்றில் 320 T-80 டாங்கிகள் அடங்கும். இந்த ஒப்பந்தம் கார்கிவ் மாலிஷேவ் டாங்க் தொழிற்சாலையை திவால் நிலையிலிருந்து காப்பாற்றியது. டிசம்பர் 2008-ல், ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட UPAZ எரிபொருள் நிரப்பும் பாட்களுடன் கூடிய நான்கு IL-78 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க பாகிஸ்தான் உக்ரைனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜூன் 2020-ல், பாகிஸ்தான் விமானப்படையின் IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களில் ஒன்றை மேம்படுத்துவதற்கான பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் உக்ர்ஸ்பெட்செக்ஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். பிப்ரவரி 2021-ல், பாகிஸ்தான் இராணுவத்தின் டி-80UD பிரதான போர் டாங்கிகளை பழுதுபார்ப்பதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் உக்ரோபோரோன்ப்ரோம் 85.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.