
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் செயல்களுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை இந்திய நிறுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இருக்குமதிகளுக்கு தடை விதித்தது. இவற்றில் எல்லாம் சிந்து நதி நீரை நிறுத்தியது தற்போது பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் சிந்து நதி நீரை நம்பி இருக்கின்றனர். விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிந்து நதி நீரை நிறுத்தி இருப்பது போருக்கு சமம் என்று பாகிஸ்தான் நேற்று அதன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதற்கிடையே, போர் மூளும் சூழல் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போர் ஒத்திகை, நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி (நாளை) நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலை ஏற்கனவே அமெரிக்கா கடுமையாக கண்டித்து இருந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. அமெரிக்க சென்ற பின்னர் இந்த தாக்குதலை ஜேடி வான்ஸ் கண்டித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ''எப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடு இந்தியா. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்க உதவி செய்யும்'' என்று தெரிவித்துள்ளார். திங்களன்று கேபிடல் ஹில்லில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ஜான்சன், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேசினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்.
மேலும் செய்தியாளர்கள் இவரிடம், இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மைக் ஜான்சன், ''இந்தியாவில் நடந்த செயல்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்களது கூட்டாளிக்கு ஆதரவாக நிற்கவே நாங்கள் விரும்புகிறோம். பல வழிகளில் எங்களுக்கு உகந்த கூட்டாளியாக இந்தியா இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
''முக்கியமான நாட்டில் இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியா எங்களுக்கு முக்கியமான உறவு நாடு. மேலும் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்க வேண்டும். அந்த முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்காவில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். டிரம்ப் நிர்வாகம் அந்த உறவின் முக்கியத்துவத்தையும், பயங்கரவாத அச்சுறுத்தலின் முக்கியத்துவத்தையும் தெளிவாக புரிந்துகொள்கிறது'' என்றார்
இதற்கு முன்னதாக ஏப்ரல் 30 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பஹல்காமில் நடந்த "கொடூரமான பயங்கரவாத தாக்குதலில்" உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்த ரூபியோ, தெற்காசியாவில் "பதற்றங்களைத் தணிக்கவும்" அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவை ஊக்குவித்தார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.