தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்குகளை உற்று நோக்கி கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்க வழக்கை அமெரிக்கா உற்று கவனித்து வருவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் வேதாந்த் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
இதன் நீட்சியாக அவர் கூறுகையில், ''நமது இரண்டு ஜனநாயக நாடுகளின் ஜனநாயகக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாப்பதை, வலுப்படுத்துவதை முன்னிலைப்படுத்தி வருகிறோம்'' என்றார்.
undefined
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி விஷயம் குறித்த கேள்விக்கு, ''இருதரப்பு உறவுகளைக் கொண்ட எந்த நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை அமெரிக்கா கவனித்து வருவது இயல்பானது'' என்றார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு, "சட்டத்திற்குட்பட்ட ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரம் என்பது எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை முக்கியத்துவம் பெற்றது. மேலும் காந்தியின் வழக்கை இந்திய நீதிமன்றங்களில் நாங்கள் கவனித்து வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''இந்திய ஒத்துழைப்பு நாடுடன் கருத்து சுதந்திரம், ஜனநாயக மதிப்பு ஆகிய நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்'' என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'மோடி குடும்பப்பெயர்' குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வியாழன் அன்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மோடி சமூகம் தொடர்பான கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
லோக்சபாவில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் (செவ்வாய்-புதன்கிழமை) இந்தியா முழுவதும் 35 நகரங்களில் செய்தியாளர் சந்திப்பு நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 'ஜனநாயகம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது' என்ற பிரச்சாரத்தின் கீழ் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும விவகாரம் மற்றும் இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடியவர்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.