பிரதமர் மோடிக்கு பிரத்யேக டி-ஷர்ட் ஒன்றை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நினைவு பரிசாக வழங்கியுள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நியூயார்கில் தொடங்கியது. நியூயார்க்கில் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
இதையடுத்து, வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளித்தார். அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தனிப்பட்ட வகையில் இரவு விருந்தையும் ஜோ பைடன் அளித்தார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் சிறிது நேரம் தனிமையில் கலந்துரையாடினர்.
அதன்பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்ப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்க உறவுகள் முழு உலகிற்கும் உத்வேகம் அளிப்பதாகவும், இந்தியா வளர்ச்சியடையும் போது, உலகம் முழுவதும் வளரும் என்றார். மேலும், இந்திய-அமெரிக்க உறவுகளை செயற்கை நுண்ணறிவுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, AI என்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா என்ற மற்றொரு அர்த்தம் உள்ளது என்றார்.
“கடந்த சில ஆண்டுகளில், AI- செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு AI- அமெரிக்கா (A), இந்தியா (I) உறவில் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது, சபையில் மோடி, மோடி என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், AI பற்றி பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய வாசங்கள் பொறித்த சிறப்பு டி-ஷர்ட் ஒன்றை அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். அதில், செயற்கை நுண்ணறிவுதான் (AI) எதிர்காலம்; அமெரிக்கா (A) - இந்தியா (I) என்ற வாசங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தனது அமெரிக்க பயணத்தின் கடைசி நாளான இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஹை-டெக் மீட்டிங்கில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் கூக், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நமது ஒத்துழைப்பு நமது சொந்த மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது.” என்றார். பிரதமர் மோடி பேசுகையில், ‘திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ என்றார். இதையடுத்து, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளித்த மதிய விருந்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.