ஆப்கானிஸ்தானை விட்டு முழுவதுமாக வெளியேறிய அமெரிக்க ராணுவம்.. கொண்டாடி தீர்க்கும் தலிபான்கள்..!

By Asianet TamilFirst Published Aug 31, 2021, 8:50 AM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறிவிட்டன. இதை தலிபான்கள் கொண்டாடிவருகிறார்கள்.
 

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்கா இரட்டைக் கோபுரம் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா அறிவித்தது. தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்த ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் போரில் குதித்தன. இதில் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அமெரிக்க ராணுவம் வெளியேறிய தொடங்கிய நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பியோடினார். இதனையடுத்து ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படையினர் மற்றும் பல்வேறு நாட்டு குடிமக்களையும் தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்லும் பணிகள் நடைபெற்று வந்தன. மக்களை ஏற்றிச்செல்ல ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலிபான்கள் கெடு விதித்திருந்தனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் புறப்பட்டதாக அந்நாட்டின் மத்திய கட்டளை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்தார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் முடிவுக்கு வந்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்துள்ளார். இதற்காக ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பைடன், கடந்த 17 நாட்களில் 1.20 லட்சம் அமெரிக்க குடிமக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறிவிட்ட நிலையில், அதை தலிபான்கள் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!