இந்த தாக்குதலில் காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டம் திட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின. இதற்கிடையில் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலில் காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டம் திட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ராக்கெட்டுகளையும் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் தடுத்து அழித்ததாக கூறப்படுகிறது.