ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம்... எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா, உக்ரைன் ராணுவம்!!

By Narendran S  |  First Published Mar 30, 2022, 10:01 PM IST

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 


இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர்த் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இரு நாடுகளுடனும் கருங்கடல் எல்லையை பகிர்ந்து வரும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் கீவ் அருகே செர்னிவ் பகுதியில் எங்களது படைகளை குறைக்க உள்ளோம் என்றார். அதனால் கீவ் மற்றும் செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆனால், தெற்கு உக்ரைன் துறைமுக நகரமான மைகோலாய்வில் உள்ள அரசு கட்டிடத்தை ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கின. இஸ்தான்புல்லில் நடந்த உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச் கலந்து கொண்டார். இவர் கடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போது, அவருடன் சேர்ந்த மேலும் இருவருக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், உக்ரைன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், கீவ் மற்றும் செர்னிவ் பகுதியில் ரஷ்யப் படைகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நம்பவில்லை. கிழக்கு உக்ரைனில் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்த வசதியாக தற்போது இந்த வாபஸ் அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்யப் படைகள் மீண்டும் ஒருங்கிணைவதற்கான அறிகுறிகள் அதிகளவில் உள்ளன. ராணுவ துருப்புக்களை திரும்பப் பெறுதல் என்று கூறப்படுவது, படைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம்.

மேலும் உக்ரைன் ராணுவத் தலைமையை தவறாக வழிநடத்துவதை  நோக்கமாகக் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், கீவ்வின் புறநகர் பகுதியில் இருந்த ரஷ்யப் படைகள், அங்கிருந்து வெளியேறி வருகின்றன. ஆனால் அவர்கள் மீண்டும் அங்கு குவிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது, அவர்கள் மீண்டும் படைகளை அங்கு குவிக்க உள்ளனர். படைகளை அவர்கள் திரும்ப பெறவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுவதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். களத்தில் என்ன நடக்கிறது என்பதை கூர்மையாக காண வேண்டும். கீவ் நகரை விட்டு சிறிய எண்ணிக்கையிலான துருப்புக்கள் மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவை, நாட்டின்  பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த படைகள் வடக்கு நோக்கி நகர்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!