சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஜெனரல் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களில் இந்திய துணை தூதரகத்தின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இந்த தீ வைப்பு சம்பவம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், “வன்முறை வன்முறையை தூண்டுகிறது” என்ற வாசகத்தை பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு, காலிஸ்தான் புலிப்படை (KTF) தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணம் தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயலுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வாக்கு மிக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குற்றச்செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துவுக்கு எதிரான வன்முறை மிகுந்த கருத்துக்களையும் அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். மேலும் பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதற்கு அல்லது சொத்துக்களை சேதப்படுத்துவது அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா, மைக்கேல் வால்ட்ஸ் இந்தியா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் இணைத் தலைவர்கள், “தூதரகத்தின் மீதான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீ வைப்பு, இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து உள்பட இந்திய தூதர்களை குறி வைத்து வன்முறை வாசகங்களுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்துகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் அது சொத்துக்களை அழிக்கவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ அல்ல. தூரதக வசதிகளுக்கு எதிரான வன்முறை ஒரு கிரிமினல் குற்றம்; அது பொறுத்துக் கொள்ளப்படாது. இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த விசாரணையை சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்டவர்களை விரைவாக விசாரிக்குமாறு வெளியுறவுத்துறையை வலியுறுத்துகிறோம்.” என அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்திய துணைத் தூதரகத்தின் மீது மீண்டும் மீண்டும் வெறுப்பூட்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதை கண்டிக்கிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, ஹதீஸ்களை ஆவணப்படுத்தும் சவுதி அரசு..
இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ தானேதர், “ஜனநாயகத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கூறுகையில், இந்தத் தாக்குதல் மோசமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். “எங்களது கூட்டாளிகளுக்கு ஆதரவாக நமது அமெரிக்கர்கள் இருப்பார்கள். தேசபக்தியுள்ள இந்திய-அமெரிக்க சமூகத்திற்கு ஆதரவாக அவர்கள் எப்போதும் இருப்பார்கள்” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பாகிஸ்தான் உளவுத்துறையினருடனான உறவுகளுக்கு பெயர் பெற்ற காலிஸ்தான் அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் தன்னைப் புதுப்பிக்க முயற்சி செய்து வருகிறது” என தெற்காசிய சிறுபான்மையினர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் அவமானகரமானது என்று சீக்கியத் தலைவர் ஜஸ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
“குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அது காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படுவதால், சீக்கிய சமூகம் மிகவும் வருத்தத்தில் உள்ளது. பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைகளுக்கும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்த குற்றச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.