ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்கும் வகையில் அவரது மகள்கள் மீது அமெரிக்க அதிபர் பைடன் , பொருளாதார தடையை விதித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்கும் வகையில் அவரது மகள்கள் மீது அமெரிக்க அதிபர் பைடன் , பொருளாதார தடையை விதித்துள்ளார்.உக்ரைன் மீது 42 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் இருமகள்கள் மீது தனிப்பட்ட முறையில் புதிய தடைகளை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதின் மகள்களை குறித்து பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
ரஷ்யா அதிபர் புதினுக்கு மரியா புதின், கேத்திரீனா டிக்கோனாவா எனும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த தடையினால் அமெரிக்காவில் அவர்களுக்கு சொத்து இருந்தால் அதனை இனி பயன்படுத்த முடியாது. மேலும் அவர்கள் இருவரும் இனி ரஷ்ய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் இனி எந்த பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போன்று ரஷ்யாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கிகள் அமெரிக்க நிதி அமைப்பு தொடர்புக்கொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே ரஷ்யாவில் அமெரிக்கர்களில் எந்த ஒரு முதலீடுகளுக்கு தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று கையெழுத்திவிட்டார். இது அமெரிக்கர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதினின் மகள்களை தவிர, ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.புதின் மகள் டிக்கோனாவா ரஷ்ய ஸ்டேட் யூனிவர்சிட்டியில் அறிவியல் மையத்தின் இயக்குனராகவும் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனராகவும் உள்ளார்.
மேலும் அவர் 2013 மற்றும் 2018 க்கு இடையில் ரோசியா வங்கியின் இணை உரிமையாளரின் மகனான எரிவாயு நிறுவன நிர்வாகி கிரில் ஷமலோவை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் புதினின் மகள்கள் மீது அமெரிக்கா தடை விதிக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு தந்தை புதினின் சொத்துக்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த புதிய உத்தரவுகளை பிறபித்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் புதினின் பல்வேறு சொத்துகள் குடும்ப உறுப்பினர்களிடம் மறைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம். அதனால் தான் அவர்களை குறி வைக்கிறோம் என்றும் கூறப்படுகிறது.