அமெரிக்காவில் ஜோ பைடன் அரசை கடுமையாக சாடியுள்ள டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்துச் சிரிக்கின்றன என்றும் நாடு நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆபாச நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் புளோரிடாவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். அங்கு கூடியிருந்த தன் ஆதரவாளர்கள் முன்பு பேசிய அவர், அமெரிக்கா நரகத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டொனால்ட் டிரம்ப் முன்னான் ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் இருக்கும் படம் வெளியானது. இது தேர்தல் நேரத்தில் டிரம்ப்க்கு பின்னடவை ஏற்படுத்தியதால் ஸ்டோர்மிக்கு டிரம்ப் தரப்பில் 1.30 லட்சம் டாலர் பணம் கொடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு... டொனால்டு டிரம்ப் கைது!
இது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை டொனால்டு டிரம்ப் ஆஜரானார். மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றத்திற்கு வந்த அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பின் அவர் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானம் மூலம் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பிய டிரம்ப் தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசினார். "அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பயமின்றி, அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றியது தான் நான் செய்த ஒரே தவறு" என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்திருக்கிறது. ஆனால், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்ற அவர், "நாடு நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டார். அமெரிக்க எல்லைகளைத் திறந்துவிட்டது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்ப பெறப்பட்டது போன்ற காரணங்களால் ஏற்கெனவே உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்துச் சிரிக்கின்றன எனவும் அவர் விமர்சித்தார்.
முன்னதாக, டிரம்ப் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியானதும் சில சமூக ஊடக பயனர்கள் ட்ரம்பை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்ததாக ஆன்லைன் பயங்கரவாதச் செயல்களைக் கண்காணிக்கும் அமெரிக்க புலனாய்வு குழு தெரிவித்தது. அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் மீது முதல் முறையாக கிரிமினல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு